அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ஈரான் போரில் அமெரிக்காவுக்கு ஆதரவு தராத நேட்டோ நாடுகளை ‘கோழைகள்’ என அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளத்தில் அவர் கூறியதாவது:
“அமெரிக்கா இல்லையென்றால் நேட்டோ வெறும் பேப்பர் புலி மட்டுமே. அணுசக்தி பலம் கொண்ட ஈரானை தடுக்கும் இது போரில் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்க மறுத்துவிட்டது. இதை குற்றச்சாட்டாக முன்வைக்கிறேன். இந்த மோதலில் இப்போது ராணுவ ரீதியாக வெற்றி கிடைத்துள்ளது.
இதனால் அவர்களுக்கு (நேட்டோ) ஆபத்து சற்று குறைவுதான். ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியை இயல்பு நிலைக்கு திறக்க அவர்கள் உதவ முன்வரவில்லை. சிறிய ராணுவ தந்திர நடவடிக்கை மூலம் இதை சாத்தியம் செய்திருக்கலாம். அதற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டது என குறை சொல்லி வருகின்றனர். அவர்கள் கோழைகள். அதை நாங்கள் நினைவில் கொள்வோம்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வியாழக்கிழமை அன்று ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான சரக்க கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக கூட்டறிக்கை வெளியிட்டன. இந்த நிலையில் ட்ரம்ப் இதை தெரிவித்துள்ளார்.
நேட்டோ: வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பதன் சுருக்கம்தான் நேட்டோ. 30 ஐரோப்பியா நாடுகள் மற்றும் 2 வட அமெரிக்க நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் இந்த அமைப்பு உருவானது. கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வதுதான் இந்த அமைப்பின் நோக்கம். இதன் உறுப்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்படும்.