உலகம்

ஏப்.22-க்குள் உடன்பாடு எட்டப்படாவிட்டால் ஈரான் போர் நிறுத்தம் முடிவுக்கு வரும்: ட்ரம்ப் கெடு

வேட்டையன்

மேரிலாந்து: எதிர்வரும் 22-ம் தேதிக்குள் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் ஈரான் உடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வரக்கூடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் மேற்கொண்டது. இந்தச் சூழலில் கடந்த 8-ம் தேதி அமெரிக்காவும், ஈரானும் இரண்டு வார கால இடைக்கால போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தன.

இரண்டு தரப்புக்கும் இடையில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஏப்.11 அன்று அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் அமெரிக்கா தரப்பில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் கால்பாஃப் ஆகியோர் பங்கேற்றனர். இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. தொடர்ந்து அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கும் நோக்கில் செயல்பட்டன. இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் அமலான காரணத்தால் ஹார்முஸ் ஜலசந்தியை கப்பல் போக்குவரத்துக்கு திறப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்கா முடக்க கூடாது என ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே விரைவில் இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 22-ம் தேதியுடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில், ‘போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா?’ என செய்தியாளர் சந்திப்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.

வரும் புதன்கிழமைக்குள் (ஏப்.22) ஈரான் உடனான பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டு, ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும். அப்படி நடக்காத பட்சத்தில் இந்த இடைக்கால போர் நிறுத்தம் முடிவுக்கு வரும். மீண்டும் குண்டுகளை வீச வேண்டி இருக்கும். போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என ட்ரம்ப் தெரிவித்தார்.

அதே நேரத்தில் ஈரான் உடனான திரை மறைவு பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் அமெரிக்க அரசு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT