புதுடெல்லி: மேற்கு ஆசியப் போருக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் கூறியதை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ‘எக்ஸ்' தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்தப் பதிவில், “இந்தியாவுடனான எங்களின் அற்புதமான உறவு தொடர்ந்து வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் (ட்ரம்ப்) காரியங்களை சிறப்பாக முடிக்கும் இரு தலைவர்கள். இத்தகைய செயல்திறன் பலருக்கு இருப்பதில்லை’’ என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் நடைபெறும் போக்கு மத்தியில் அதிபர் ட்ரம்பின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடியும் அதிபர் ட்ரம்பும் நடத்திய தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இக்கருத்து வெளிவந்துள்ளது.
மேற்கு ஆசியப் போர் குறித்து அப்போது இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர். உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு உயிர்நாடியாகத் திகழும், உலகின் எண்ணெய் கப்பல் போக்குவரத்தில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கை கையாளும் ஹார்முஸ் ஜலசந்தியை திறந்த நிலையிலும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பதே விவாதத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது.
மேற்கு ஆசிய விவகாரத்தில் இந்தியா எச்சரிக்கையான அதேவேளையில் தெளிவான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. இந்தியா தனது பொருளாதார நலன்களை பாதுகாக்கும் அதேவேளையில் பேச்சுவார்த்தை மற்றும் நிதானத்தை கடைப்பிடிக்குமாறு இரு தரப்புக்கும் வலியுறுத்தி வருகிறது.
வேகமாக மாறிவரும் புவிசார் அரசியல் சூழலுக்கு மத்தியில், அமெரிக்கா - இந்தியா இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாட்டை இவ்விரு தலைவர்களுக்கு இடையிலான உரையாடல் பிரதிபலித்தது.
இதற்கிடையில் வளைகுடா முழுவதும் ஈரான் தனது பதிலடி நடவடிக்கைகளை தொடர்ந்தாலும், இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை திறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.