“கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கை இழந்ததால் ‘சீட்’ குறைத்தது திமுக!” - பழனிசாமி பேச்சு

சென்னை - நங்கநல்லூரில் தேர்தல் பிரச்சாரம்
“கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கை இழந்ததால் ‘சீட்’ குறைத்தது திமுக!” - பழனிசாமி பேச்சு
Updated on
5 min read

சென்னை: “திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அவர் வெள்ளிக்கிழமை மாலை ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நங்கநல்லூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

“ஆலந்தூர் தொகுதி அதிமுகவின் கோட்டை. விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என்பதற்கு இங்கே கூடியிருக்கும் மக்களே சாட்சி.

மயிலாப்பூரில் முதன் முதலாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினோன். நான் பேசியதில் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. என் பேச்சுக்கு மூன்று அமைச்சர்கள் ஏதேதோ வகையில் பதில் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் சொன்ன கருத்துக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. ஸ்டாலின் அதிர்ச்சியடைந்து இருக்கிறார். நிச்சயமாக அதிமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் வெல்லும், அதிமுக ஆட்சி அமைக்கும்.

ஸ்டாலின் தொடர்ந்து 25 நாட்களாக தேர்தல் கூட்டணி குறித்து பேசி வருகிறார். 25 நாட்கள் பேசியும் இன்னும் முடிவு எட்டவில்லை. 4 நாட்கள் மட்டும் நாங்கள் பேசினோம். முதல் நாள் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் வந்தார்கள். பேசினோம், உடனே, எத்தனை எத்தனை இடங்கள் என்று அப்போதே அறிவித்த கட்சி அதிமுக.

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் எல்லாம் புலம்பிக்கொண்டு இருக்கின்றன. ஒரு கட்சியின் மூத்த தலைவர், திமுக தலைமையுடன் பேசிவிட்டு வந்து, ‘அழுதுக்கொண்டே சிரிக்கிறோம்’ என்று பேட்டி அளித்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில் திமுக தலைமையேற்று இருக்கிறது. அதுமட்டுமல்ல, விசிகவுக்கு இன்னும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி செய்யவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் அறிவிக்கவில்லை.

ஆனால், ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் ஊடகங்களில், ‘எங்கள் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணி’ என்று செய்தி வெளியிடுவார். தொடர்ந்து 10 ஆண்டு காலம் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கிறார்கள் என்று பெருமை பேசுவார். அப்படி 10 ஆண்டுகள் உங்கள் கூட்டணியில் இருந்த காரணத்தினால் தான், அவர்களுக்கு ஒரு தொகுதியைக் குறைத்து கொடுத்து இருக்கிறீர்கள்.

10 ஆண்டுகளாக கூட்டணிக் கட்சிகள் உங்களுக்கு விசுவாசமாக இருந்தார்கள், தமிழ்நாட்டில் நடைபெற்ற பாலியல், கொலை, கொள்ளை பற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் பேசவே இல்லை. வாயை திறக்காமல் மவுனம் காத்தார்கள், உங்கள் ஆட்சிக்கு துணையாக நின்றார்கள், உங்கள் ஆட்சிக் காலத்தில் நாட்டில் நடைபெற்ற மக்கள் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் கூட அவர்கள் எடுத்து வைக்கவில்லை. அப்படி இருந்தும் உங்களுடன் இருந்தவர்களுக்கு ஓர் இடம் குறைத்து கொடுத்துள்ளீர்கள்.

அண்மையில் திமுகவுடன் போய் சேர்ந்த கட்சிக்கு அதிக இடம் கொடுத்தார்கள். இதுதான் திமுக. ஆனால், அதிமுக அப்படி இல்லை. தேர்தல் நேரத்தில் கூட்டணி வைப்போம், முடிந்து விட்டால் அந்தந்த கட்சி அவரவர்களின் கொள்கையில் மக்கள் பிரச்சினையை முன்வைப்பார்கள். அது எங்கள் கூட்டணி தர்மம்.

ஒவ்வொரு கட்சியும் மக்களுக்காக பாடுபட வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கங்கள். மக்கள் பிரச்சினையை எடுத்துரைக்க வேண்டும் என்பது கட்சிகளின் முதன்மை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் திமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணிக் கட்சிகள் மக்களுடைய பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை. அதனால் அந்த கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. மக்கள் செல்வாக்கை இழந்து விட்டதால், அவர்களுக்கு குறைவான இடங்களை திமுக வழங்கி இருக்கிறது என்பதை அவர்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.

இபிஎஸ் 10 தோல்விகளை கண்டு விட்டார் என்று ஸ்டாலின் பேசிகிறார். 2011 முதல் 2021 வரை தில்லு, திராணி தெம்பு இருந்தால், நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் போதும், மறைந்த பின்னும், அதிமுகவை திமுக வீழ்த்தியதாக வரலாறே கிடையாது.

2011-ல் கருணாநிதி தலைமையில் திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கவில்லை. ஆனால் அம்மா மறைவுக்கு பிறகு எவ்வளவோ சோதனைகள். அத்தனை சோதனைகளையும் சந்தித்து 2021-ல் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையில் அமர்ந்தோம். அதிமுக தலைமையில் அமைக்கப்பட்ட கூட்டணி 75 இடங்களில் வென்றது. இது எங்கள் சாதனை. தலைவர்கள் இல்லை, தொண்டர்கள், மக்களின் ஆதரவோடு, மிகச் சிறப்பாக தேர்தல் பணியாற்றி மக்களை சந்தித்து 75 இடங்களில் வென்றோம். இதுதான் வெற்றி ஸ்டாலின் அவர்களே. வாய்சவடால் பேசுவதால் மட்டும் பிரயோஜனம் இல்லை. 5 ஆண்டு கால உங்கள் ஆட்சியில் நாட்டு மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது?

விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. விலை குறைக்க நடவடிக்கை எடுத்தீர்களா? அதிமுக ஆட்சியில் பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ 40 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய், பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் 45 ரூபாய் - திமுக ஆட்சியில் 75 ரூபாய். இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 30 ரூபாய் - திமுக ஆட்சியில் 48 ரூபாய், கடலெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 130 ரூபாய் - திமுக ஆட்சியில் 190 ரூபாய், நல்லெண்ணை ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 250 ரூபாய் - திமுக ஆட்சியில் 500 ரூபாய், துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 74 ரூபாய் - திமுக ஆட்சியில் 130 ரூபாய், உளுத்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் 79 ரூபாய் - திமுக ஆட்சியில் 120 ரூபாய். ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை.

விலைவாசியால் ஏழை நடுத்தர மக்கள் பாதிக்காமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் வெளி மாநிலத்தில் இருந்து மளிகைப் பொருட்களை கொள்முதல் செய்து, குறைந்த விலையில் மக்களுக்கு கொடுத்தது அதிமுக அரசு.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு எவ்வளவு பிரச்சினைகளை சந்தித்தோம்..? கட்சியில் பிரச்சினை, திமுகவின் பி டீமாக இருந்தவர்கள் எங்கள் கட்சிக்குள் இருந்துகொண்டே எங்களுக்கு குழி தோண்டிக் கொண்டிருந்தனர். அந்த விஷமிகள் அடையாளம் காட்டப்பட்டு விட்டார்கள். யார் என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

மக்கள் ஆதரவோடு தொண்டர்கள் ஆதரவோடு 4 ஆண்டுகள் 2 மாத காலம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். முதற்கட்டமாக 2017-ல் கடுமையான வறட்சி, நகர மக்களுக்கு குடிக்கக் கூட தண்ணீர் கிடையாது. அந்த கால கட்டத்தில் மக்களுக்குத் தடையில்லாமல் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் கொடுத்தது, அதிமுக அரசு.

டெல்டாவில் ஐந்தாறு மாவட்டங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதமடைந்தன. மக்களின் உடைமைகள் புயலால் சேதமடைந்தன. அவற்றையெல்லாம் சரி செய்தோம். அதன் பிறகு கரோனா. அது எப்படிப்பட்ட காலம் என்பது உங்களுக்குத் தெரியும்.

மக்கள் யாரும் விதியில் நடமாடவில்லை. ஓராண்டு 11 மாத காலம் மக்கள் வீட்டிலேயே இருந்தார்கள். அந்த காலத்தில் கூட சிறப்பான ஆட்சியைக் கொடுத்தது அதிமுக. அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வருமானம் கிடையாது. தொழிற்சாலைகள் திறக்கவில்லை., ஜிஎஸ்டி வரி கிடையாது, பெட்ரோல் பங்க் திறக்கவில்லை. அதிலிருந்து வருவாய் கிடைக்கவில்லை. டாஸ்மாக் மூடப்பட்டது, சாலை வரி கிடையாது, பத்திரப்பதிவு கிடையாது, வருவாய் இல்லாத நிலையிலும் சிறப்பான ஆட்சியை தந்த அரசு, அதிமுக அரசு.

விலைவாசியால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். ஏழை மக்களுக்கு வேலை கிடைக்கவில்லை. மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், 11 மாதம் ரேஷன் கடையில் மளிகைப்பொருள்கள் விலை இல்லாமல் கொடுத்தோம். வருமானமே இல்லாமல் கரோனா காலத்தில் 40 ஆயிரம் கோடியை செலவு செய்த அரசு அதிமுக அரசு. திறமையாக செயல்பட்டு ஒரு நல்ல அரசு என்று மக்களிடம் பேர் வாங்கியது அதிமுக அரசு.

ஆனால், உங்கள் அரசு அப்படியா இருக்கிறது…? புயல் வந்ததா…? வெள்ளம் வந்ததா…?. கொரோனா வந்ததா…? எதுவுமில்லை. ஆனால், கடன் மட்டும் 5 லட்சம் கோடியாக அதிகரித்துவிட்டது. எப்போது பார்தாலும் இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என்று ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார். கடன் வாங்குவதில் முதல் முதலமைச்சர் என்பது உண்மைதான். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. ஒரு பக்கம் கடன் வாங்குகிறீர்கள், அதன் மூலம் சென்னை மக்களுக்கு ஏதாவது திட்டம் வந்ததா? தமிழ்நாட்டு மக்களுக்கு வந்ததா?

2021 அதிமுக ஆட்சியில் இருந்த வருவாயை விட 2024-25 திமுக ஆட்சியில் வருவாய் ஒரு லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதலாக வந்துள்ளது. அப்படி இருந்தும் கடன் வாங்க வேண்டிய அவசியம் என்ன? அதாவது அத்தனையும் ஊழல். கலெக்சன், கமிஷன், கரப்ஷன் அது தான் திமுக ஆட்சி.

அதிமுக ஆட்சிக்கும் திமுக ஆட்சிக்கும் உள்ள வேறுபாடுகளை எண்ணிப்பாருங்கள். அதிமுக ஆட்சி மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்ததால், இந்தியாவிலேயே அதிகமான தொகை ஒரு திட்டத்திற்கு 63 ஆயிரம் கோடி பெற்ற ஒரே அரசு அதிமுக அரசு. மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் - 2, 118 கி.மீ ரயில்வே பாதைகள் அமைக்க, 63 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து நாம் பெற்றோம். மத்திய அரசு அள்ளிக்கொடுத்தது.

சென்னை மாநகர மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரதமரை அணுகினோம், கோரிக்கை வைத்தோம், பிரதமர் அறிவிப்பை கொடுத்து, உள்துறை அமைச்சர் நேரடியாக சென்னைக்கு வந்து அடிக்கல் நாட்டினார். இது அதிமுகவின் வரலாற்று சாதனை. இப்படி ஒரு சாதனை திமுக ஆட்சியில் பார்க்க முடிந்ததா…?

எத்தனை பாலங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறோம். அற்புதமான சாலைகள் கொடுத்திருக்கிறோம். தாம்பரம் - செங்கல்பட்டு வரை உயர் மட்டப் பாலத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி வாங்கினோம், அதை கிடப்பில் போட்டுவிட்டார்கள். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அந்த திட்டத்தை நிறைவேற்றி போக்குவரத்து நெரிசலைக் குறைப்போம்.

சென்னை நகரைச்சுற்றி ரிங் சாலை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்தோம். சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் அந்த திட்டத்திற்கு ஒதுக்கி தொடங்கிவைத்தோம். ஆனால் இன்னும் அந்த பணி நிறைவு பெறவில்லை. எல்லாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் எந்த புதிய திட்டமும் கொண்டுவரப்படவில்லை.

இன்று திமுக ஆட்சியில் நகராட்சி, குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற ஊழலை ஆதாரத்தோடு கண்டுபிடித்து, டிஜிபிக்கு மூன்று முறை அறிக்கை அனுப்பினார்கள். இதுவரை எஃப்.ஐ.ஆர். போடவில்லை. நீதிமன்றம் சென்று, நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்னும் வாய்தா வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள். ஊழல் செய்வதில் மன்னர்கள், நகர்ப்புற வளர்ச்சித்துறையில் பணி நியமன ஊழல், அமலாக்கத்துறை கண்டுபிடித்தது. அதிமுக ஆட்சியில் தோண்டி எடுக்கப்பட்டு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கு பார்த்தாலும் போதை பல வடிவத்தில் விற்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் விற்பதே திமுகவினர் தான். போதை ஆசாமிகளால் தான் மக்கள் நடமாட முடியவில்லை. சிறுமி முதல் பாட்டி வரை யாரையும் விட்டுவைப்பதில்லை. தங்க விலை நிலவரம் போல கொலை நிலவரம் தினமும் வருகிறது. இப்படிப்பட்ட ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

வீட்டு வரி 100% உயர்த்திவிட்டனர். ஆண்டுக்கு 6% உயர்வு. கடைக்கு 150% உயர்வு. குப்பைக்கும் வரி போட்ட அரசு இது. மின்கட்டணம் கேட்டாலே ஷாக் அடிக்கிறது. 52% உயர்வு, ஆண்டுக்கு 5% உயரும். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாநகராட்சியில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர், ஊழல் செய்துள்ளனர்.

மதுரையில் 200 கோடி ஊழல், பன்றிக்கு போட்ட வரியிலும் ஊழல் செய்தனர். திமுக அரசே அதை கண்டுபிடித்தது. பலர் ராஜினாமா செய்துள்ளனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சி தொடர வேண்டுமா?

அதிமுக ஆட்சியில் விலைவாசி குறைக்கப்படும். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் ஆகிவிட்டது. திமுக கட்சியினருக்கு மரியாதை இல்லை, என் பக்கத்தில் கந்தன் இருப்பது போல, ஸ்டாலின் பக்கத்தில் யாராவது நிற்க முடியுமா? நான் கீழேயிருந்து மேலே வந்தவன். மக்களோடு மக்களாக இருந்தேன், மக்கள் அவதிகள் அறிந்தவன். ஆட்சி எப்படி செய்யவேண்டும், எப்படி நிவர்த்தி செய்வது என்று தெரிந்ததால் தான், கொரோனா காலத்தில் கூட சிறப்பாக ஆட்சி செய்தோம். மக்கள் இந்த தேர்தலில் நல்ல வாய்ப்பை தருவீர்கள் என்று நம்புகிறோம், கொடுத்தால் இந்தியாவே வியக்கும் அளவுக்கு ஆட்சி கொடுப்போம்.

நான் தெய்வ பக்தி உள்ளவன். ஸ்டாலினைப் போல் வாரிசாக இல்லாமல், உழைத்து உங்களிடம் வந்திருக்கிறேன். ஸ்டாலினும் நானும் 1989-ல் எம்.எல்.ஏ. ஆனோம். சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றேன். அவர் வந்த வழி வேறு, நான் வந்த வழி வேறு, அவர் அப்பா கருணாநிதி. அதனால் சுலபமாக வென்று வந்தார். நான் சாதாரண தொண்டராக இருந்து எம்.எல்.ஏ ஆகி, அமைச்சராகி, படிப்படியாக உயர்ந்து முதல்வர் ஆனேன். வாரிசு அரசியல் குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது. சுதந்திரமாக மக்கள் செயல்படும் ஆட்சி வேண்டும் என்றால் தே.ஜ கூட்டணியில் அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால், எல்லா குடும்ப தலைவிக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மக்களின் துன்பத்தைக் களைய உதவித்தொகை 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். குடும்ப அட்டைதாரர்களுக்கு ஃப்ரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா பருப்பு, எண்ணெய் வழங்கப்படும்.

வீடு இல்லாதவர்களுக்கு அரசே நிலம் வாங்கி வீடு கட்டுக்கொடுக்கும். சென்னையிலும் கிராமத்திலும், பெண்களுக்கு அம்மா இரு சக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க 75 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3 சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு பட்டுசேலை வழங்கப்படும்.

பட்டப்படிப்பு படித்து பதிவு செய்த இளைஞர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய், +2 வரை படித்தவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். இன்னும் நிறைய அறிவிப்புகள் வெளியிட்டிருக்கிறோம்’’ என்று பேசினார்.

“கூட்டணிக் கட்சிகள் செல்வாக்கை இழந்ததால் ‘சீட்’ குறைத்தது திமுக!” - பழனிசாமி பேச்சு
கூட்டணி ‘குமுறல்’ தாக்கம் - திமுக ‘டார்கெட்’டுக்கு சிக்கலா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in