வாஷிங்டன்: அமெரிக்காவுடன் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானில் குண்டு மழை பொழியும் என்றும், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்க ராணுவம் அசாத்திய துணிச்சலை வெளிப்படுத்தி உள்ளது.
ஆனால் நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டீரிட் ஜர்னல் உள்ளிட்ட நாளிதழ்கள் பொய் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. ஈரான் கடற்படை, விமானப்படை முழுமையாக அழிக்கப்பட்டு உள்ளது.
ஈரானின் அணு சக்தி தளங்கள் தகர்க்கப்பட்டு உள்ளன. அந்த நாட்டின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா, ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
இந்தப் போர் நிறுத்தம் புதன்கிழமையுடன் நிறைவடைகிறது. அதற்குள் அமெரிக்காவுடன் ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இல்லையெனில் ஈரான் முழுவதும் குண்டுமழை பொழியும். அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்த துளியும் தயங்க மாட்டோம். போர் நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை.
என்னைப் பொறுத்தவரை இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் ஈரான் பிரதிநிதிகள் கண்டிப்பாக பங்கேற்பார்கள். இல்லையெனில் அதற்கான விளைவுகளை அந்த நாடு சந்திக்கும். ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, ஈரான் இடையே போர் நடைபெற்றது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பு இடையே இரு வாரங்களுக்கு போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள் இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் 2-ம் சுற்று பேச்சுவார்த்தையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அணு ஆயுதம், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் போர் நிறுத்தம் உள்ளிட்ட விவகாரங்களில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதனால் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழுக்கள் இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்று ஈரான் தலைவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இதனால் 2-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக நீடிக்கிறது.