உலகம்

‘‘தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை’’ - ட்ரம்ப் திட்டவட்டம்

மோகன் கணபதி

வாஷிங்டன்: தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து தேவை. நாங்கள் கட்டியெழுப்பும் கோல்டன் டோம் திட்டத்துக்கு இது மிகவும் முக்கியமானது.

கிரீன்லாந்தை அமெரிக்கா பெறுவதற்கு நோட்டோவே முன்னின்று வழிநடத்த வேண்டும். நாம் அதைச் செய்யாவிட்டால், சீனாவோ அல்லது ரஷ்யாவோ அதைச் செய்துவிடும். அது நடக்கவே விடக்கூடாது.

ராணுவ ரீதியாக, அமெரிக்காவின் மகத்தான சக்தி இல்லாமல், அதில் பெரும்பாலானவற்றை நான் எனது முதல் பதவிக் காலத்தில் உருவாக்கினேன். இப்போது அதை (கோல்டன் டோம் திட்டத்தை) ஒரு புதிய மற்றும் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கிறேன். நேட்டோ ஒரு பயனுள்ள சக்தியாகவோ அல்லது தடுப்பு சக்தியாகவோ இருக்காது. நிச்சயம் ஒருபோதும் இருக்காது. அது அவர்களுக்கும் தெரியும்.

அமெரிக்காவின் கைகளில் கிரீன்லாந்து இருக்கும்போது நேட்டோ மிகவும் வலிமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாறும். அதைவிடக் குறைவான எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்துக்கு நன்றி!’’ என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

டென்மார்க் நாட்டின் தன்னாட்சி பிரதேசம் கிரீன்லாந்து. அங்கு ரேர் எர்த் மினரல்ஸ் எனப்படும் அரிதான கனிம வளங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரம் தொட்டே கிரீன்லாந்தை பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வருகிறார் டொனால்டு ட்ரம்ப்.

போதைப் பொருள் பயங்கரவாதத்தை அமெரிக்கா மீது ஏவிவிடுவதாக வெனிசுலா மீது குற்றஞ்சாட்டி வந்த ட்ரம்ப், அந்தப் பெயரில் வெனிசுலா நாட்டு அதிபரை சிறைப்பிடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ட்ரம்ப் கிரீன்லாந்து மீதான தனது வேட்கையை மீண்டும் பகிரங்கமாகத் தெரிவிக்க, அது தற்போது கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் ஃப்ரெட்ரிக் நீல்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். இன்னமும் அழுத்தம் தர வேண்டாம். மறைமுகமாகக் கூட உங்களின் ஆக்கிரமிப்பு எண்ணங்களைச் சொல்ல வேண்டாம். எப்படியாவது இணைத்துக் கொள்ளலாம் என்று கனவும் காண வேண்டாம். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை சரியான முறையில் நடக்க வேண்டும். சர்வதேச சட்டத்தை மதிப்பதாக இருக்க வேண்டும்.

கிரீன்லாந்து எங்கள் வீடு, எங்கள் பிராந்தியம். இனியும் அப்படித்தான் இருக்கும். வரலாற்று ரீதியாக அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து நெருங்கிய கூட்டாளி. நாங்கள் பலமுற கிரீன்லந்து விற்பனைக்கு அல்ல என்று தெளிவாகத் தெரிவித்த பின்னரும் கூட ட்ரம்ப் மீண்டும் மீண்டும் இணைப்பு பற்றிப் பேசுவதும் சரியல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT