தெஹ்ரான்: ஈரானில் வசிக்கும் இந்தியர்கள், கிடைக்கக் கூடிய போக்குவரத்தைப் பயன்படுத்தி நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு புதிய அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. அதில், ‘‘ஜன.5-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவுறுத்தலின் தொடர்ச்சியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
ஈரானில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் ஆகியோர், வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக் கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் நாட்டைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஈரானில் மாறிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டே இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் இந்திய வம்சாவளியினரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தூதரகம் மீண்டும் வலியுறுத்துகிறது. போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் இருந்து விலகி இருக்குமாறு இந்தியர்களை தூதரகம் கேட்டுக்கொள்கிறது.
தற்போதைய நிலவரங்களை அறிந்து கொள்ள ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும், உள்ளூர் ஊடகச் செய்திகளை கண்காணிக்குமாறும் இந்திய குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஈரானில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் தங்கள் பாஸ்போர்ட், அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பாக எந்த ஒரு உதவிக்கும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தொலைபேசி எண்கள் +989128109115; +989128109109; +989128109102; +989932179359 மற்றும் மின்னஞ்சல் cons.tehran@mea.gov.in ஆகியவற்றின் மூலம் இந்திய தூதரகத்தை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தில் இதுவரை பதிவு செய்யாத அனைத்து இந்தியக் குடிமக்களும் https://www.meaers.com/request/home என்ற இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யுமாறு தூதரகம் அறிவுறுத்துகிறது.
ஈரானில் இணைய தடங்கல்கள் காரணமாக பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மூலம் பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களால் அங்கு அசாதாரண நிலை நிலவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2,400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் உயிரிழந்துள்ளனர், 18,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.