உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியதால் பதற்றம் - நடப்பது என்ன?

செய்திப்பிரிவு

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடும் நடவடிக்கையை ஈரான் ஈரான் மேற்கொண்ட நிலையில், அப்பகுதியை கடக்க முயன்ற எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் ரேடியோ மூலம் எச்சரிக்கை விடுத்த ஈரான் கடற்படை,‘பேச்சுவார்த்தையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற அமெரிக்க அரசு தவறியதால், ஹார்முஸ் ஜலசந்தியை முற்றிலும் மூடுவதாக ஈரான் அறிவிக்கிறது. எந்த நாட்டு கப்பலும் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியில்லை’ என்று தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்ல முயன்ற ஒரு எண்ணெய்க் கப்பல் மீது, எச்சரிக்கை விடுக்காமல் ஈரான் ராணுவத்தினர் 2 படகுகளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தச் சம்பவம் ஓமனுக்கு வடகிழக்கில் 37 கி.மீ தொலைவில் நடைபெற்றுள்ளது. இதில் கப்பலுக்கும் அதில் உள்ள ஊழியர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சரக்குக் கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் இங்கிலாந்து அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஹார்முஸ் பகுதியைக் கடக்க முயன்ற 2 இந்திய ஆயில் டேங்கர் கப்பல் மீது ஈரான் கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதனால் அந்தக் கப்பல்கள் பின்வாங்கின. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்திய ஆயில் டேங்கர் கப்பல் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதை, இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது குறித்து இந்திய அதிகாரிகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய ஆயில் டேங்கர் கப்பல்களுக்கு எந்த தடையும் இதுவரை இல்லாத நிலையில், இந்திய கப்பல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து இந்திய கடற்படையும் விசாரித்து வருகிறது.

முன்னதாக, அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இஸ்ரேல் - லெபனான் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதால், ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் அறிவித்தது. இதையடுத்து ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகை விலக்கிக் கொள்ளப்படும் என அமெரிக்கா வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால், அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி உட்பட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இறுதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கப்பற்படை முற்றுகை தொடரும். அதுவரை ஈரான் துறைமுகங்களுக்கு எந்த கப்பலும் வந்து செல்லக் கூடாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இது ஒப்பந்த விதிமீறல் என்பதால், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடி கட்டுப்பாடுகள் விதிப்பதாக ஈரான் ராணுவம் அறிவித்தது கவனிக்கத்தக்கது.

SCROLL FOR NEXT