அமெரிக்கா முழுவதிலும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமாயின. டெக்சாஸ் மாகாணத்திலுள்ள டிஎஃப்டபிள்யூ விமான நிலையத்தில் அணிவகுத்து நின்ற விமானங்கள். படம்: பிடிஐ

 
உலகம்

அமெரிக்காவில் தொழில்நுட்பக் கோளாறால் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவை பாதிப்பு

சுமார் 15 லட்சம் பயணிகள் அவதி

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் சுமார் 15 லட்சம் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

அமெரிக்கா முழுவதும் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் நேற்று முன் தினம் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் விமானங்கள் புறப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஏற்கெனவே வானில் பறந்து கொண்டிருந்த விமானங்களையும் உடனடியாகத் தரையிறக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இதனால் 10,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தாமதமானதாகக் கூறப்படுகிறது. 4,700 விமான சேவைகள் ரத்தாகின. இந்தப் பாதிப்பால் சுமார் 15 லட்சம் பயணிகள் தங்களது பயணங்களைத் தொடர முடியாமல் தவித்தனர். பலர் விமானப் பயணத்தைத் தவிர்த்து சாலை மார்க்கமாகத் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்லத் தொடங்கினர்.

இதற்கிடையே, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட கோளாறுக்கு சைபர் தாக்குதல் காரணமல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. தொலைத்தொடர்பு சேவை செயலிழந்ததே பாதிப்புக்குக் காரணம் என அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்வெய்ன் முல்லின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விமானங்கள் புறப்படுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், விமான சேவைகள் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்ப சில மணி நேரங்கள் ஆகும் என்று அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு அமெரிக்கா முழுவதும் விமானங்கள் புறப்படுவது நிறுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். 2023-ம் ஆண்டு விமானப் போக்குவரத்துத் துறையின் முக்கிய கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கு முன்பு, 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT