

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஜெம் கிரானைட் வீரமணி வீட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி சோதனை நடத்தப்பட்டது. படங்கள்: எல் சீனிவாசன்.
சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணியின் வீட்டில், சிறுமியின் உடல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய சோதனையில் எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. இதற்கிடையே, இத்தகவலை அளித்த கார் ஓட்டுநர் பாலாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில், 84 வயதான ஜெம் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்மன், உதவியாளர் கணேசன், கார் ஓட்டுநர்கள் லாசர், பார்த்திபன், பாபு உள்ளிட்ட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெம் வீரமணி மீது இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீஸார் காவலில் எடுத்து ஜெம் வீரமணி மற்றும் சாந்தி, மகேந்திர சிம்மனிடம் தீவிர விசாரணை நடத்தினர். ஜெம் வீரமணி மீதான முதல் வழக்கில் 720 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீரமணியின் வீட்டில் கார் ஓட்டுநராகவும் காவலாளியாகவும் பணியாற்றி வந்த பாலா என்பவரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிடித்து விசாரித்தனர். அப்போது, வீரமணியின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாகவும், அவரது உடல் வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல் குளம் அருகே புதைக்கப்பட்டதாகவும் பாலா தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, காவல் துறையினர், வருவாய்த் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் நேற்று காலை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டுக்குச் சென்றனர். சிறுமியின் உடல் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்ட இடங்களில் ஆய்வு செய்வதற்காக பொக்லைன் இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டன.
காலை 11 மணியளவில் வீட்டின் பின்புறத்தில் பல்வேறுஇடங்களில் பள்ளங்கள் தோண்டி தேடுதல் நடத்தப்பட்டது. மாலை 5 மணி வரை நடைபெற்ற சோதனையில், 10 அடிக்கும் மேல் ஆழம் தோண்டியும் மனித உடலோ, எலும்புக் கூடுகளோ கண்டெடுக்கப்படவில்லை. இதனால், சோதனை மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையே, சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாகத் தகவல் அளித்த பாலா மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் அவரைக் கைது செய்தனர். இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
பாலா அளித்த தகவல் உண்மையா அல்லது வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக அவர் தவறான தகவலைத் தெரிவித்தாரா என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும், பாலா குறிப்பிட்ட இடங்களைத் தாண்டி வீட்டின் மற்ற பகுதிகளிலும் விரிவான தடயவியல் ஆய்வு நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.