உலகம்

ஸ்காட்லாந்தில் அறுவை சிகிச்சை தந்தை சுஸ்ருதர் சிலை திறப்பு

செய்திப்பிரிவு

எடின்பர்க்: உலக அறு​வைச் சிகிச்சை தந்தை என்​றழைக்​கப்​படும் மகரிஷி சுஸ்​ருதரின் சிலை ஸ்காட்​லாந்து தலைநகர் எடின்பர்க்​கில் திறக்​கப்​பட்டு உள்​ளது.

பிரிட்​டனின் ஒருங்​கிணைந்த பகு​தி​யான ஸ்காட்​லாந்து தலைநகர் எடின்​பர்க்​கில் ‘தி ராயல் காலேஜ் ஆப் சர்​ஜன்ஸ் ஆப் எடின்​பர்க்’ என்ற மருத்​துவ கல்வி நிறு​வனம் செயல்​படு​கிறது. இந்த மருத்​துவ கல்வி நிறு​வனத்​தில் உலக அறு​வைச் சிகிச்சை தந்தை என்​றழைக்​கப்​படும் மகரிஷி சுஸ்​ருதரின் வெண்கல சிலை திறக்​கப்​பட்டு உள்​ளது.

ஆந்​தி​ராவை பூர்வி​க​மாகக் கொண்ட பிரிட்​டனின் பிரபல அறுவைச் சிகிச்சை நிபுணர் சந்​திரா செருவு தனது சொந்த செலவில் சிலையை நிறுவி உள்​ளார். தமிழகத்​தின் திரு​வண்​ணா​மலையை சேர்ந்த சிற்​பிகள், மகரிஷி சுஸ்​ருதரின் 90 கிலோ சிலையை நேர்த்​தி​யாக வடிவ​மைத்து எடின்​பர்க் நகருக்கு அனுப்பி வைத்து உள்​ளனர்.

கடந்த 6-ம் நூற்​றாண்​டில் உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் மகரிஷி சுஸ்​ருதர் வாழ்ந்​தார். இவர் சிறு​வய​திலேயே மருத்​து​வம் மற்​றும் அறுவைச் சிகிச்​சையை கற்​றுத் தேர்ந்​தார். இன்​றைய நவீன கால அறு​வைச் சிகிச்​சை, பிளாஸ்​டிக் சர்​ஜரிக்கு இவரே அடித்​தளம் அமைத்​தார்.

மகரிஷி சுஸ்​ருதர் எழு​திய சுஸ்​ருத சம்​ஹிதை, உலகின் மிக​வும் தொன்​மை​யான மருத்​துவ நூல் ஆகும். இந்த நூலில் அறு​வைச் சிகிச்சை முறை​கள் குறித்​தும், ஆயுர்​வேத மருத்​து​வம் குறித்​தும் தெளி​வாக எடுத்​துரைக்​கப்​பட்டு உள்​ளது. 121 வகை​யான அறுவைச் சிகிச்சை கருவி​கள், அவற்றை பயன்​படுத்​தும் முறைகள் குறித்து சுஸ்​ருதர் ஆவணப்​படுத்தி உள்​ளார்.

மூக்கை இழந்​தவர்​களுக்கு அவர்​களது நெற்​றி, கன்​னத்​தில் இருந்து தோலை எடுத்து புதிய மூக்கை உரு​வாக்​கும் நவீன பிளாஸ்​டிக் சர்​ஜரி அறு​வைச் சிகிச்​சையை சுஸ்​ருதர் வெற்றிகரமாக மேற்​கொண்​டார். இதுவே உலகின் முதல் அறு​வைச் சிகிச்சை, பிளாஸ்​டிக் சர்​ஜரி ஆகும். சுமார் 300 வகை​யான அறுவைச் சிகிச்​சைகளை அவர் வெற்​றிகர​மாக மேற்​கொண்டு உள்​ளார்.

SCROLL FOR NEXT