புதுடெல்லி: இத்தாலியின் விசென்சா மாகாணம் லூசியானாவில் 1946 டிசம்பர் 9-ம் தேதி சோனியா பிறந்தார். சிறுவயதில் அங்குள்ள வீட்டில்தான் அவர் வசித்து வந்தார். இத்த வீட்டை இத்தாலியில் வசிக்கும் சீக்கிய தொழிலதிபர் சுக்தேவ் சிங் காங் (52) 6 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் சுக்தேவ் சிங் கூறும்போது, “சோனியா வசித்த வீட்டை 2020-ல் என் மனைவி மற்றும் மகளின் பெயரில் வாங்கினேன். அங்கு ஒரு பராமரிப்பாளர் உள்ளார். சுற்றுலாப் பயணிகள் அந்த வீட்டைப் பார்க்க விரும்பினால், அவர் அதற்கு ஏற்பாடு செய்கிறார்.
‘இந்தியன் ஹவுஸ்’ என்று அழைக்கப்படும் அந்த வீட்டில் இந்திய தேசிய மூவர்ணக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அதன் வெளியே உள்ள பெயர் பலகையில் ‘சோனியா காந்தி பிறந்த இடம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீட்டை சோனியாவின் அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிட்டுள்ளேன். இதில் காட்சிப்படுத்துவதற்கான நினைவுப் பொருட்களைப் பெறுவதற்காக சோனியா காந்தி குடும்பத்தைச் சந்திக்க ஆவலாக உள்ளேன்” என்றார்.
பஞ்சாப் மாநில் ஹோஷியார்பூர் அருகே உள்ள கிராமத்தில் பிறந்தவர்தான் சுக்தேவ் சிங். 1992-ல் வேலை நிமித்தமாக இத்தாலிக்குச் சென்ற அவர், இப்போது அங்கு பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். நிரந்தர குடியுரிமையும் பெற்றுள்ளார்.
சோனியா நன்றி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் நன்றி தெரிவிக்கும் எமோஜியுடன், “சிங் சாப் அவர்களின் இந்த அன்பான செயலுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.