ரோட் ஐஸ்லாந்து: அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேக நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இது தொடர்பாக பிரவுன் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 2 உயிரிழப்புகளை உறுதி செய்ததுடன், மேலும் 9 பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் இயல்பு நிலை திரும்பும்வரை வெளியில் வர வேண்டாம் என்றும், துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அடையாளம் காணும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணைகள் தொடர்வதாகவும், எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் மேயர் பிரட் ஸ்மைலி தெரிவித்தார்.
சந்தேக நபரை கண்டறிய பிரவுன் பல்கலைக்கழக அதிகாரிகள், பிராவிடன்ஸ் நகர காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர் கூறினார்.
மேலும், துணை காவல்துறைத் தலைவர் டிமோதி ஓ'ஹாரா தனது செய்தியாளர் சந்திப்பில், “சந்தேகத்திற்குரிய அந்த நபர் கருப்பு உடை அணிந்த ஒரு ஆண் என்று கூறினார். சந்தேக நபர் பிரவுன் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் எப்படி நுழைந்தார் என்பதை காவல்துறை விசாரித்து வருவதாகவும், ஆனால் அவர் ஹோப் தெரு வழியாக வெளியேறினார் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
தாக்குதல் நடந்த இடத்திலிருந்து சந்தேக நபர் வெளியேறுவதைக் காட்டும் ஒரு காணொளியை விரைவில் வெளியிட காவல்துறை திட்டமிட்டுள்ளது, இருப்பினும் அதில் அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லை. “யாராவது அந்த நபரை ஏதேனும் ஒரு வகையில் அடையாளம் கண்டால் அது பற்றி எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்" என்று டிமோதி ஓ'ஹாரா கூறினார்.
இந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் 70-க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன.