டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரானுக்கு இடையே நேற்று 21-வது நாளாக போர் நீடித்தது. ஈரான் ராணுவத்தின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்பு படை (ஐஆர்ஜிசி), அமெரிக்காவுக்கு எதிரான போரை வழிநடத்தி வருகிறது.
ஐஆர்ஜிசி படையின் மூத்த தளபதியாகவும் செய்தித் தொடர்பாளராகவும் அலி முகமது நைனி பணியாற்றி வந்தார். ஈரான் அரசு தொலைக்காட்சியில் அவர் நேற்று கூறுகையில், ‘‘ஏவுகணைகள் மூலம் எங்களது எதிரிகளுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம். புதிய வகை ஏவுகணைகளால் மிகப்பெரிய தாக்குதல் நடத்தி அதிர்ச்சி அளிப்போம்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.
அவரது பேட்டி அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில மணி நேரங்களில் இஸ்ரேல் ராணுவம் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் அலி முகமது நைனி உயிரிழந்தார். அவரது மரணத்தை ஈரான் அரசு உறுதி செய்திருக்கிறது.
ஐஆர்ஜிசி மூத்த தளபதி நைனியின் மரணத்துக்கு பழிவாங்கும் வகையில் இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. மேலும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானின் ட்ரோன்கள் குண்டுகளை வீசின. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, ‘‘ஈரானால் இனிமேல் யுரேனியத்தை செறிவூட்ட முடியாது. பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்கவும் முடியாது’’ என்றார்.