புது டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர்.
பொது சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களை காரணம் காட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜேஏஏசி அமைப்புக்கு அதிகாரிகள் தடை விதித்தனர். இந்த தடைக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்தன. வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினருடனான மோதலின்போது வணிகர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து ரவாலகோட் நகரில் பல இடங்களில் மோதல்கள் தொடங்கின.
ரவாலகோட்டின் உயர்மட்ட சிவில் அதிகாரியான கமிஷனர் சர்தார் வஹீத் கான் கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமையன்று ஜேஏஏசி போராட்டக்காரர்கள் மருத்துவமனை பிணவறைக்கு வெளியே கூடியிருந்தனர். அந்த இடத்தில் பதற்றமான சூழல் உருவானதால், பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றனர். அப்போது அக்குழுவைச் சேர்ந்தவர்கள் தானியங்கி துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுக்கும்போது ஆறு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர்" என்று கூறினார். இந்த நடவடிக்கையின் போது பலர் கைது செய்யப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இருப்பினும், உள்ளூர் மக்களும், ஜேஏஏசி ஆதரவாளர்களும் அரசின் அதிகாரப்பூர்வ தகவலை மறுத்துள்ளனர். பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகம் என்று அவர்கள் தெரிவித்தனர். ஜூலை 27 அன்று அப்பிராந்தியத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 45 இடங்களில், அகதிகளுக்காக 12 இடங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து ஜேஏஏசி அமைப்பு வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்தச் சூழலில் இத்தகைய மோதல்கள் ஏற்பட்டுள்ளன.