உலகம்

குடிநீர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண பனிப்பாறைகளை கப்பலில் இழுத்து வர விஞ்ஞானிகள் திட்டம்

செய்திப்பிரிவு

ரியாத் / வாஷிங்டன்: உலக அளவில் நன்​னீர் தட்​டுப்​பாடு நாளுக்கு நாள் பூதாகர​மாக உரு​வெடுத்து வரு​கிறது. இந்நிலையில், அண்​டார்​டிகா மற்​றும் ஆர்க்​டிக் துரு​வப் பகுதிகளில் உள்ள பிரம்​மாண்​ட​மான பனிப்பாறைகளைக் கடல் வழியே கப்​பல்​கள் மூலம் இழுத்து வந்து நன்​னீ​ராக மாற்​றும் விசித்​திர​மான திட்​டத்தை சர்​வ​தேச விஞ்​ஞானிகள் மற்​றும் பொறியாளர்​கள் மீண்​டும் பரிசீலித்து வரு​கின்​றனர்.

கடந்த 1977-ம் ஆண்டு சவுதி அரேபி​யா​வின் இளவரசர் முகமது அல்​-பைசல், அரேபிய தீபகற்​பத்​தின் கடுமை​யான குடிநீர் பஞ்சத்தைத் தீர்க்க இந்த யோசனையை முதன்​முதலில் உலகுக்கு முன்​வைத்​தார். இத்​திட்​டத்​தின் சாத்​தி​யக்​கூறை நிரூபிப்​ப​தற்​காக, அலாஸ்கா பகு​தி​யில் இருந்த சுமார் 1.5 டன் எடை​யுள்ள மிகப்​பெரிய பனிப்​பாறை ஒன்றை ஐயோவா மாநிலத்​துக்​குப் பிரத்​யேகக் கப்​பல் மூலம் வெற்​றிகர​மாக இழுத்து வந்து செயல்​முறை விளக்​க​மும் அளித்​தார்.

அக்​காலத்​தில் தொழில்​நுட்​பக் குறை​பாடு​கள், பனிப்​பாறை வழியிலேயே உரு​கு​வதைத் தடுக்​கும் முறை​கள் இல்​லாதது மற்றும் அதி​கப்​படி​யான கடற்​போக்​கு​வரத்​துச் செலவு ஆகிய காரணங்​களால் இத்​திட்​டம் வணிக ரீதி​யாகத் தொடரப்​ப​டா​மல் கைவிடப்​பட்​டது.

நவீன தொழில்நுட்பத்துடன்...

இப்​போது நவீனத் தொழில்​நுட்​பத்​துடன் அந்த திட்​டத்தை மறு​பிர​வேசம் செய்ய விஞ்​ஞானிகள் தீவிர​மாக முயன்று வரு​கின்​றனர். தற்​போது பரு​வநிலை மாற்​றம், நிலத்​தடி நீர் மட்​டம் குறைதல் மற்றும் மக்​கள்​தொகை பெருக்​கம் காரண​மாக ஐக்​கிய அரபு அமீரகம், தென்​னாப்​பிரிக்கா போன்ற நாடு​களில் நன்​னீர் தட்டுப்பாடு உச்​சத்​தைத் தொட்​டுள்​ளது.

இதன் காரண​மாக, சர்​வ​தேசப் பொறி​யாளர்​கள் குழு இத்திட்டத்தை அதிநவீனத் தொழில்​நுட்​பங்​களு​டன் மீண்​டும் கையிலெடுத்​துள்​ளது. துரு​வப் பகு​தி​யில் மிதக்​கும் சரி​யான வடிவம் கொண்ட பனிப்​பாறை​களை செயற்​கைக்​கோள் மூலம் கண்​டறிதல். கடல் பயணத்​தின்​போது வெப்​பத்​தால் பனிப்​பாறை உரு​காமல் இருக்க, அதைச் சுற்றி வெப்​பம் கடத்தா சிறப்பு உறைப் பூச்​சுகளைப் பயன்​படுத்​துதல்.

குறைந்த எரிபொருளில் அதிக எடையைச் சுமந்து செல்​லும் நவீனக் கப்​பல்​கள் மூலம் பனிப்​பாறை​களைப் பாது​காப்​பாகக் கரைக்​குக் கொண்டு வருதல் உள்​ளிட்​ட​வற்​றில் விஞ்​ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வரு​கின்​றனர். ஒரு மிகப்​பெரிய பனிப்பாறையைக் கொண்டு வரு​வதன் மூலம் லட்சக்கணக்​கான மக்​களுக்​குப் பல மாதங்​களுக்​குத் தேவை​யான தூய்​மை​யான குடிநீரை வழங்க முடி​யும் என ஆய்​வாளர்​கள் தெரிவிக்​கின்​றனர்.

சுற்​றுச்​சூழலுக்​குப் பெரிய பா​திப்​பு​கள் இன்றி இத்​திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்​கான இறுதி சாத்​தி​யக்​கூறுகள் குறித்து தீவிர ஆய்​வு​கள்​ தற்​போது நடைபெற்​று வருகின்​றன.

SCROLL FOR NEXT