சிங்கப்பூர்: உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடி உயர்த்தப்பட உள்ளது.
சிங்கப்பூர் அரசு, திறமையானவர்களை அரசியலுக்குக் கொண்டு வரவும், நல்ல நிர்வாகத்தை உறுதி செய்யும் வகையிலும் அரசியல் தலைவர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு ஊதியம் ரூ.16.05 கோடியில் இருந்து ரூ.27 கோடியாக அதிகரிக்க உள்ளது. ஏற்கெனவே உலகின் அதிக சம்பளம் பெறும் பிரதமராக சிங்கப்பூர் பிரதமர் உள்ள நிலையில், மேலும் 64% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல அந்நாட்டு துணைப் பிரதமரின் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு ஊதியம் ரூ.14.02 கோடியில் இருந்து ரூ.22.94 கோடி வரை அதிகரிக்கிறது. கேபினட் அமைச்சர்களின் ஊதியம், அவர்களின் பதவி மூப்பு மற்றும் பொறுப்புகளுக்கு ஏற்ப சுமார் ரூ.13.5 கோடி முதல் சுமார் ரூ.21.59 கோடி வரை உயர்த்தப்படும். எனினும், இவை நிர்ணயிக்கப்பட்ட ஊதிய அளவுகள் மட்டுமே.
அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக இந்த முழுத் தொகையையும் பெறமாட்டார்கள். அக்.15 முதல் ஒருமுறை அதிகபட்சமாக 9% ஊதிய உயர்வு வழங்கப்படும். அதன் பின்னர், ஊதிய மாற்றங்கள் தனிநபரின் செயல்திறன் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் இருக்கும்.