

சென்னை: துலீப் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கிழக்கு மண்டலம் - தென் மண்டலம் அணிகள் விளையாடி வருகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் கிழக்கு மண்டலம் அணி 708 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் இஷான் கிஷன் 270 ரன்களும், குமார் குஷாக்ரா 101 ரன்களும் விளாசினர்.
இதையடுத்து விளையாடிய தென் மண்டலம் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 80 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது. கேப்டன் திலக் வர்மா 56, ஷாமா மிலிந்த் 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய தென் மண்டலம் அணி 107.3 ஓவர்களில் 336 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ-ஆன் ஆனது.
ஷாமா மிலிந்த் 43, திரிபுரண விஜய் 1, முகமது சிராஜ் 1 ரன்களில் நடையை கட்டினர். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா 211 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 99 ரன்கள் எடுத்த நிலையில் முகமது கவுனைன் குரேஷி பந்தில் ஆட்டமிழந்தார். கிழக்கு மண்டலம் அணி தரப்பில் முகேஷ் குமார் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.
முகமது ஷமி, முகமது கவுனைன் குரேஷி, ஷிகார் மோகன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 372 ரன்கள் முன்னிலை பெற்ற கிழக்கு மண்டலம் அணி, தென் மண்டல அணிக்கு பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது. 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் கிழக்கு மண்டலம் அணி 51 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது.
வைபவ் சூர்யவன்ஷி 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான அபிமன்யூ ஈஸ்வரன் 3 ரன்னில் நடையை கட்டினார். அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 98 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், ஷிகார் மோகன் 85 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 52 ரன்களும் விளாசிய நிலையில் ஆட்டமிழந்தனர். சுதீப் குமார் கராமி 2 ரன்களில் நடையை கட்டினார். குமார் குஷாக்ரா 34, முகமது கவுனைன் குரேஷி 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
கைவசம் 5 விக்கெட்கள் இருக்க 584 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள கிழக்கு மண்டலம் அணி இன்று கடைசி நாள் ஆட்டத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி டிரா ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் மூலம் கிழக்கு மண்டலம் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.