புளோரிடா: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட நெருக்கமாக உள்ளதாகவும், ஆனால் இரு நாடுகளின் தலைவர்களுடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்பிரச்சினையில் வெளிப்படையான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.
தான் அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவேன் என உறுதியளித்த ட்ரம்ப், பதவியேற்று ஒரு வருடங்கள் ஆகிறது. ஆனாலும், இப்போரை நிறுத்த ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் எதுவும் இதுவரை பெரிதாக கைகொடுக்கவில்லை.
இந்த சூழலில், அதிபர் ட்ரம்ப் நேற்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை புளோரிடாவில் சந்தித்துப் பேசினார். ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்கு முன்பு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். அப்போது ரஷ்யா அமைதி விஷயத்தில் "தீவிரமாக" இருப்பதாக புதின் வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஜெலன்ஸ்கியுடன் செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், "நாங்கள் இரு தரப்பினருடனும் முன்பை விட மிக நெருக்கமாக இருக்கிறோம் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன். எல்லோரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் இரு நாடுகளின் தலைவர்களுடனான புதிய பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இப்பிரச்சினையில் வெளிப்படையான எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
நாங்கள் பேச்சுவார்த்தையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன், என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இல்லையென்றால், இது நீண்ட காலத்திற்கு நீடிக்கும். இந்த செயல்முறைக்கு எனக்கு எந்த காலக்கெடுவும் இல்லை. போரை முடிவுக்குக் கொண்டுவருவது சாத்தியமா என்பது சில வாரங்களுக்குள் தெளிவாகிவிடும்" என்று ட்ரம்ப் கூறினார்.
இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக, உக்ரைனுடனான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்தில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுமாறு ரஷ்யா உக்ரைனை வலியுறுத்தியது.
டான்பாஸிலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கான துணிச்சலான முடிவை உக்ரைன் இப்போது எடுக்க வேண்டும் என்று ரஷ்ய ராஜதந்திர ஆலோசகர் யூரி உஷாகோவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டான்பாஸில் உள்ள கிழக்கு டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் ஐந்தில் ஒரு பகுதி இன்னும் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து உக்ரைன் வெளியேறவேண்டும் என்பது ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையாகும்.
அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு இடையேயான தொலைபேசி அழைப்பு குறித்து பேசிய உஷாகோவ், " தற்காலிக போர்நிறுத்தத்திற்கான உக்ரைன் மற்றும் ஐரோப்பிய முன்மொழிவு மோதலை நீட்டித்து, மீண்டும் மோதலை தொடங்கவே வழிவகுக்கும். சண்டையை தற்காலிகமாக நிறுத்துவது என்பது உக்ரைன் மீண்டும் ஆயுதம் ஏந்த வாய்ப்பாக அமையும். தற்காலிக தீர்வுக்கு பதிலாக, மோதலின் மூல பிரச்சினைகளை தீர்க்கும் ஒரு இறுதித் தீர்வையே ரஷ்யா விரும்புகிறது” என்றார்