புதுடெல்லி: பிரபல எழுத்தாளர் ராபர்ட் கியோசாகியின் ‘ரிச் டாட் புவர் டாட்’ (Rich Dad Poor Dad) என்ற நிதி மேலாண்மை புத்தகம் 1997-ல் வெளியானது. இதுவரை 4.4 கோடிக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி உள்ளன. இதன் மூலம் பெரும் புகழும் செல்வமும் ஈட்டிய 79 வயதான கியோசாகிக்கு சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.11 ஆயிரம் கோடி) கடன் இருப்பது தெரியவந்துள்ளது.
தனது ரியல் எஸ்டேட் வர்த்தகம் முழுவதுமே சுமார் 1.2 பில்லியன் டாலர் கடனின் மீது கட்டப்பட்டதுதான் என்பதை அவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டுள்ளார். பல்வேறு நேர்காணல்கள், ‘பாட்காஸ்ட்’ நிகழ்ச்சிகளில் இந்தக் கடன் தொகையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ள கியோசாகி, வருமானம் தரும் சொத்துகளை வாங்குவதற்காக கடன் வாங்குவதே பணக்காரர்களின் அணுகுமுறை என்பதற்கு இதுவே சான்று என்று தனது வாதத்தை வைக்கிறார்.
சொத்துகளின் மதிப்பு உயரும்போது அவற்றின் மீது கடன் வாங்குவது கியோசாகியின் முக்கிய உத்தியாகும். சொத்துகளை விற்பனை செய்வதற்குப் பதிலாக, அதிலிருந்து பெறப்படும் கடன் தொகையை வரிவிலக்கு பெற்ற வருமானமாக அவர் பயன்படுத்துகிறார். மேலும், ஒரு முதலீட்டில் இழப்பு ஏற்பட்டால் அது மற்றொன்றைப் பாதிக்காத வண்ணம், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி ‘எல்.எல்.சி’ நிறுவனங்களின் கீழ் அவர் தனிமைப்படுத்தி நிர்வகிக்கிறார்.
இருப்பினும், இதன் அபாயங்களைப் புரிந்துகொள்ளாமல் தனது உத்தியைக் குருட்டுத்தனமாகப் பின்பற்ற வேண்டாம் என்றும் கியோசாகி எச்சரிக்கிறார். “கடனைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால், அதற்குரிய சரியான நிதியறிவைப் பெற வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கியோசாகியின் முன்னாள் மனைவியும் தொழில் கூட்டாளியுமான கிம் கியோசாகி ‘வேனிட்டி ஃபேர்’ இதழுக்கு அளித்த பேட்டியில், “இந்தக் கடனானது பிற பங்குதாரர்களுடன் இணைந்து வைத்துள்ள சுமார் 1,500 குடியிருப்பு பிரிவுகளோடு மட்டுமே தொடர்புடையது. இது கியோசாகியின் தனிப்பட்ட பொறுப்பை பாதிக்காது” என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
‘வேனிட்டி ஃபேர்’ மதிப்பீட்டின்படி, கியோசாகி தனக்கு ஆண்டிற்கு 3 மில்லியன் டாலர் வருமானம் வருவதாகக் கூறுவது உண்மையெனில், அவரது நேரடிப் பங்கிற்குரிய கடன் தொகை 30 மில்லியன் முதல் 60 மில்லியன் டாலர் வரை மட்டுமே இருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.