புதுடெல்லி: ஈரான் போர் தொடர்பாக பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் எதிர்வினையாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் ராணுவம் முழுமையாக மூடியிருக்கிறது. அந்த நாட்டு ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் சில சரக்கு கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இதனால் வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்து முடங்கி உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எல்பிஜி, எல்என்ஜி காஸுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்தச் சூழலில் பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடியுடன் அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேசினார். மேற்கு ஆசிய நிலவரம் குறித்து இருவரும் ஆலோசித்தனர். ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தினர்" என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
அதிபர் ட்ரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்கு ஆசியா நிலவரம் குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணித்து உடனடியாக அமைதியை ஏற்படுத்த இந்தியா முழு ஆதரவு அளிக்கிறது. ஒட்டுமொத்த உலகத்துக்காகவும் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட வேண்டும். அமைதி முயற்சி தொடர்பாக இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருப்போம். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.