காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய பேரழிவு வெள்ளப் பேரிடரில் இதுவரை 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த சோகம் மறையும் முன்பே திபெத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் உள்ள இமயமலையின் லாங்டாங்லிருங் பனிச்சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை கடந்த மாதம் 26-ம் தேதி உடைந்தது. இதன் விளைவாக நேபாளத்தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
பாறைகள், மண், சேறு சகதியுடன் சீறிப்பாய்ந்து வந்த வெள்ளம் வீடுகள், சாலைகள், பாலங்கள், நீர்மின் திட்டங்கள் என வழியில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டி சென்றது. ரசுவா, நுவாகோட், தாதிங் ஆகிய மாவட்டங்களை இந்த பெருவெள்ளம் புரட்டிப்போட்டது.
இதனிடையே, நேபாளத்தில் நேற்று 9-வது நாளாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்த நிலையில், பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,252 ஆக உயர்ந்தது. அதே வேளையில் 4,216 பேரைக் காணவில்லை. இவர்களில் வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவர். வெளிநாட்டு மீட்புக்குழுக்களின் உதவியோடு மாயமானவர்களை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
நேபாள காவல்துறையின்படி, சித்வானில் 355, கிழக்கு நவல்பராசியில் 218, மேற்கு நவல்பராசியில் 208 (18 உடல்கள் இந்தியாவில் மீட்கப்பட்டவை), நுவாகோட்டில் 177, ரசுவாவில் 127, கோர்க்காவில் 69, தாதிங்கில் 60, தனாஹுவில் 38 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எல்லையின் சீனப் பகுதியான கியிரோங்கில் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 541 பேர் மாயமாகியுள்ளனர்.
நேபாள ராணுவத்தின் மீட்புப் பணிகள் 9-வது நாளாக நீடிக்கிறது. ரசுவா, நுவாகோட் பள்ளத்தாக்குகளின் அடையாளங்கள் அழிந்து புவியியல் அமைப்பே மாறியதால், ஹெலிகாப்டர் விமானிகள் தங்கள் சொந்த அனுபவத்தையும் சாதுர்யத்தையும் நம்பியே பறக்கின்றனர். போடேகோசி, திரிசூலி ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் காத்மாண்டு, சித்வான், கோர்க்கா, முஸ்தாங் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மிதமான வெள்ள அபாயம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மதியம் 1.46 மணிக்கு நேபாள-உத்தராகண்ட் எல்லைக்கு அருகிலுள்ள திபெத் பகுதியில் 14 கி.மீ ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், ஏற்கெனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
91 வயது மூதாட்டி உயிர் பிழைத்தது எப்படி?
நுவாகோட்டில் உள்ள தேவிகாட் என்ற ஆற்றங்கரை நகரத்தில் இருந்த முதியோர் பராமரிப்பு இல்லத்தை பெருவெள்ளம் தாக்கியது. வெள்ளம் வருவதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்பினர். அதே நேரத்தில் 7 முதியவர்கள் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே, முதியோர் பாரமரிப்பு இல்லத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் தன்னார்வலர்கள் அங்கு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி மீட்டனர். மீட்கப்பட்ட குணா மாயா போஹரா சேறு படிந்த நிலையில் ஜேசிபி இயந்திரத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதுடன், பெரும் துயரிலும் போராடி உயிர் பிழைப்பதற்கான நம்பிக்கையின் முகமாக அவர் மாறினார்.
அவர் உள்பட முதியோர் பராமரிப்பு இலத்தில் உயிர் தப்பிய முதியவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருவெள்ளத்திலிருந்து உயிர் தப்பிய குணா மாயா போஹரா செய்தியாளர்களிடம் பேசுகையில், ``வெள்ளம் வந்தபோது நான் தரைத்தளத்தில் உள்ள எனது அறையில் இருந்தேன்.
ஏற்கெனவே எனக்கு கால்களில் ஊனம் இருக்கும் நிலையில், வெள்ளப் பெருக்கினால் கைகளில் காயம் ஏற்பட்டது. ஆனாலும் உயிர் வாழ வேண்டும் என்ற மன உறுதியுடன் மரணத்தை எதிர்த்து போராடினேன். அறையின் ஜன்னலைத் திறந்து, எனது தலையை நீர் மட்டத்திற்கு மேலே வெளியே வைத்தேன். 2-3 மணி நேரத்திற்கு தலையை தண்ணீருக்கு மேலே நீட்டியவாறே இருந்தேன். உள்ளூர் தன்னார்வலர்கள் வந்து என்னை மீட்டனர்” என்றார்.