

விழுப்புரம்: ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
1980-ல் வன்னியர் சங்கம், 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சியை தோற்றுவித்தவர் மருத்துவர் ராமதாஸ். விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் கிராமத்தில் இருந்து தமிழக அரசியல் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் கோலோச்சினார்.
இதற்கிடையே ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு கட்சியில் பிளவு உண்டானது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு கட்சி, அரசியலில் அன்புமணியின் கை ஓங்கியது. பின்னர் தந்தையும் மகனும் அண்மையில் இணைந்தனர்.
கடந்த ஜூலையில் நடைபெற்ற தனது 88-வது பிறந்தநாள் விழாவில் பேசிய ராமதாஸ், “உங்களுக்கு நல்ல செய்தியைச் சொல்கிறேன். இன்று முதல் அரசியல் துறவறம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், நான் அரசியலை பேசமாட்டேன். அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன்” என்றார். இதையடுத்து தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள், சமூக ஆர்வலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரையும் ராமதாஸ் சந்தித்து உரையாடி வருகிறார்.
ராமதாஸிடமும் அரசியல் பேச முயற்சிக்கின்றனர். ஆனால், அவர் அரசியல் பேசுவதில்லை. இந்நிலையில தைலாபுரம் இல்ல வளாகத்தின் நுழைவு வாயில் கதவு முன்பு, ‘அரசியல் துறவறம்’ என்ற தலைப்பில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், “தினசரி காலை 10 மணி முதல் முற்பகல் 12 மணி வரை ராமதாஸை சந்திக்கலாம். அரசியல் துறவறம் மேற்கொண்டுள்ளதால் ராமதாஸை சந்திக்க வரும் பார்வையாளர்கள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.