புதுடெல்லி: அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை ஒட்டி அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
கடந்த 1776-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா விடுதலை அடைந்தது. தற்போது 250-வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
வரலாற்று சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடுகிறது. இந்த நேரத்தில் 140 கோடி இந்தியர்களின் சார்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், அமெரிக்க மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியா, அமெரிக்கா இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. இரு நாடுகளின் மக்களிடையே நெருக்கமான நட்பு நீடிக்கிறது.
இந்தியாவும் அமெரிக்காவும் உலகத்தின் நன்மையை விரும்புகின்றன. 250-வது சுதந்திர தினத்தில் அமெரிக்கா செழித்தோங்கி வளர வாழ்த்துகிறேன். இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்ட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.