புதுடெல்லி: அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியே முதலிடத்தில் உள்ளார் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: வரும் டிசம்பரில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், டோரல் நகரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் 35-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடியே முதலிடத்தில் உள்ளார்.
இந்திய பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பராக அதிபர் ட்ரம்ப் கருதுகிறார். கடந்த 2020-ம் ஆண்டில் அவர் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பை இப்போதும் அவர் நினைவுகூர்கிறார். அடுத்த ஆண்டில் அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பால் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. எனினும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் கடைசி கட்டத்தை நெருங்கி உள்ளோம். அநேகமாக அடுத்த சில மாதங்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஓராண்டாக இழுத்தடிக்கப்படுகிறது என்று சிலர் கூறுகின்றனர்.
அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால் இருதரப்பு ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இந்தியாவுடனான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயன் அளிப்பதாக இருக்கும்.
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் இந்தியாவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டிருக்கிறது. வலுவான இந்தியா உடனான உறவை வலுப்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. இந்திய தரப்பில் அமெரிக்காவில் அண்மையில் 24 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. இதேபோல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் கிளைகளை விரிவாக்கம் செய்து வருகின்றன.
பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்பு நாடாக இந்தியா விளங்குகிறது. எங்களது ஆயுதங்களை அனைத்து நாடுகளுக்கும் விற்பனை செய்ய நாங்கள் விரும்பவில்லை. குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய விரும்புகிறோம். அந்த ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து குவாட் கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.