உலகம்

“சிந்து நதி நீரை தடுப்பது போர் நடவடிக்கையே” - ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரை

மோகன் கணபதி

நியூயார்க்: சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்குள் செல்வதை தடுத்து திசை திருப்பும் இந்தியாவின் செயல் போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் ஆற்றிய உரையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா கடந்த ஆண்டு நிறுத்திவைத்தது. சிந்து நதி நீர் பாகிஸ்தானுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த பிராந்தியத்துக்கும் உயிர்நாடியாக உள்ளது.

சிந்து நதி நீரில் பாகிஸ்தானுக்கு உள்ள பங்கை தடுக்கவோ, தடை செய்யவோ, திசைதிருப்பவோ மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும். இதில், இந்தியா தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கக் கூடாது.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதற்கு சட்டப்பூர்வமாக எந்த ஒரு அடிப்படையும் இல்லை. இந்த ஒப்பந்தம் தொடர்பான இந்தியாவின் வாதங்கள், ஐநா சபை நிபுணர்கள் மற்றும் நிரந்தர நடுவர் மன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், பாகிஸ்தானின் நிலைப்பாடு சரியானது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீரை ஒருபோதும் ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடாது. ஆறுகள் நாடுகளை பிரிக்காமல் செழிக்கச் செய்ய வேண்டும்.

ஓராண்டுக்கு முன்பு இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொண்டது. அப்போது, ஐநா சாசனத்தின் 51வது பிரிவின் கீழ் தற்காப்புக்கான தனது உரிமையை பாகிஸ்தான் பயன்படுத்தியது. அணு ஆயுதம் ஏந்திய இரு அண்டை நாடுகளுக்கும் இடையே ஒரு முழுமையான போர் ஏற்படுவதை தனது தலையீட்டின் மூலம் தடுத்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்.

தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாட்டுடன் அதிபர் ட்ரம்ப், அந்த இக்கட்டான தருணத்தில் தலையிடாமல் இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பேரழிவு ஏற்பட்டிருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? எனவே, தெற்காசியா மீண்டும் அத்தகைய ஆபத்தைச் சந்திக்காமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதற்கு காஷ்மீர் விவகாரத்தில் நியாயமான தீர்வு எட்டப்பட வேண்டும். அங்கு சுதந்திரமான, பாரபட்சமற்ற பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

பாகிஸ்தானைச் சீர்குலைக்கும் நோக்கில் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்விஷயத்தில், அந்த நாட்டு அதிகாரிகள் சரியான, தீர்க்கமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT