இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான இரண்டு வார இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்குமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத்தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த சூழலில் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை பாகிஸ்தான் வலியுறுத்தி உள்ளது. ஏற்கெனவே பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் பரிசீலிக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷ்க் தர் கூறியுள்ளார்.
ட்ரம்ப் சொல்வது என்ன? - ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிக்க அமெரிக்கா விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கி உள்ளார். ஈரானோடு ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை என்றால் மீண்டும் தங்கள் தரப்பு தாக்குதலை தொடங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மிரட்டல் தொனியிலான பேச்சுவார்த்தையை ஈரான் ஒருபோதும் ஏற்காது. யுத்த களத்தில் புதுவித தாக்குதலை வெளிப்படுத்த தயாராக உள்ளோம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் கூறியுள்ளார்.