இஷாக் தார் | கோப்புப் படம்
இஸ்லாமாபாத்: போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் உறுதிப்படுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு முக்கியப் பதிவில், ‘‘மேற்கு ஆசியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஊடகங்களில் தேவையற்ற ஊகங்கள் பரவி வருகின்றன.
உண்மையில், பாகிஸ்தான் வாயிலாகச் செய்திகள் பரிமாறப்படுவதன் மூலம், அமெரிக்கா - ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. அமெரிக்கா முன்வைத்த 15 அம்சங்களை ஈரான் தற்போது பரிசீலித்து வருகிறது.
சகோதர நாடுகளான துருக்கி மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகள் இந்த முயற்சிக்கு தங்கள் ஆதரவை அளித்துள்ளன. அமைதியை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் முழுமையாக உறுதியுடன் உள்ளது. மேலும், இந்த பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக தனது அனைத்து முயற்சிகளையும் பாகிஸ்தான் மேற்கொண்டு வருகிறது. பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் அந்நாட்டுக்கு எதிரான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்துவதாக கடந்த 23-ம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதற்கு, தாங்கள் எந்த பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்றும், அமெரிக்கா தனக்குத் தானே பேச்சுவார்த்தை நடத்திக் கொள்கிறதா என்றும் ஈரான் விமர்சித்திருந்தது.
இந்நிலையில், மறைமுகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்கு தங்கள் நாடு மத்தியஸ்தராக செயல்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் வெளிப்படையாக அறிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.