பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பகிர்ந்த புகைப்படம்

 
உலகம்

பிரதமர் மோடி இருக்கும் குழு படத்தை கத்தரித்த பாக். பிரதமர் - முழு படத்தை பகிர்ந்த இந்தியா

வேட்டையன்

பிஷ்கெக்: எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியை கத்தரித்து (Crop) விட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதை பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்தியா அதே படத்தை முழுவதுமாக பகிர்ந்துள்ளது.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு திங்கட்கிழமை தொடங்கியது. இதில் பெலாரஸ், இந்தியா, கஜகஸ்தான், ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான் ஆகிய உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டின் போது ஈரான், கிர்கிஸ்தான், அர்மீனியா நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்திருந்தார். இதில் ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்திருந்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற 10 உலக நாடுகளின் தலைவர்கள், ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். செவ்வாய்க்கிழமை அன்று இந்தப் படம் எடுக்கப்பட்டது. அந்தப் படத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார். அதில் பிரதமர் மோடி, ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் உள்ளிட்டோர் இருந்த பகுதியை கிராப் செய்து அவர் பகிர்ந்திருந்தார்.

ஷெபாஸ் ஷெரீஃப் கிராப் செய்து பகிர்ந்த படத்தில், அவர் உலக தலைவர்களுக்கு மத்தியில் நிற்பது போல இருந்தது. அவரது அந்தப் பதிவு சமூக வலைதளத்தில் சர்ச்சையை எழுப்பியது. இதையடுத்து பிரதமர் மோடி உட்பட உலக தலைவர்கள் அனைவரும் இருக்கும் படத்தை ஷெபாஸ் ஷெரீஃப் பகிர்ந்தார்.

எஸ்சிஓ மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்கள் எடுத்துக்கொண்ட அசல் புகைப்படம்.

அதே நேரத்தில் பிரதமர் மோடியும் எக்ஸ் சமூக வலைதளத்தில் எஸ்சிஓ மாநாட்டில் உலக தலைவர்கள் அனைவரும் இணைந்து எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்தார். அதில் வலது பக்கத்தில் இருந்து நான்காவது இடத்தில் ஷெபாஸ் ஷெரீஃப் நின்றிருந்தது தெரியவந்தது.

இதேபோல பேஸ்புக்கில் இந்த மாநாட்டில் உலக தலைவர்கள் ஆலோசித்த வீடியோ காட்சியை ஷெபாஸ் ஷெரீஃப் பகிர்ந்திருந்தார். அதிலும் பிரதமர் மோடி கிராப் செய்யப்பட்டிருந்தார். அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் எஸ்சிஓ மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT