இஸ்லாமாபாத்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் கடந்த வாரம் இடைக்காலமாக நிறுத்தப்பட்டது. இதற்கு இரண்டு தரப்பும் சம்மதம் தெரிவித்தது முக்கிய காரணமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பாகிஸ்தானில் அமெரிக்கா, ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இது தோல்வியடைந்தது. இதையடுத்து ஹார்முஸ் ஜலசந்தியை முடக்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால் மேற்காசியாவில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் அண்மையில் பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா ஆசிப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பேச்சுவார்த்தையில் நேர்மறையான முன்னேற்றம் காண்கிறோம். தற்போது இந்த முயற்சி சரியான திசையை நோக்கியுள்ளதாக கருதுகிறோம். விரைவில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறோம். மேலும், இது எல்லாம் இறைவனிடம் இருக்கிறது” என தெரிவித்தார்.
அமெரிக்கா முன்வைத்த சில நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை என அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார். பேச்சுவார்த்தை தோல்வி அடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் குற்றச்சாட்டு வைத்திருந்தது.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடி தரும் வகையில் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் சார்ந்து பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்தது. இதனால் இடைக்கால போர் நிறுத்தம் அமலானது.