இம்ரான் கானைச் சந்திக்க ராவல் பிண்டிக்கு வருகை தந்த கைபர்பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹெய்ல் அப்ரிடி
ராவல்பிண்டி: இம்ரான் கானை நேரில் சந்திப்பதற்கான சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகள் பலனளிக்காவிட்டால், கடைசி வாய்ப்பு குறித்து ஆலோசித்து வருவதாக கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வர் சோஹெய்ல் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் கொலை செய்யப்பட்டுவிட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இதனால், அக்கட்சியின் தொண்டர்கள் சிறை வளாகத்துக்கு முன்பாக கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், கைபர் பக்துன்க்வா மாகாண முதல்வருமான சோஹெய்ல் அஃப்ரிடி, இன்று ராவல்பிண்டிக்கு வருகை தந்தார். கோரக்பூர் சோதனைச் சாவடியில் செய்தியாளர்களிடம் பேசிய சோஹெய்ல் அஃப்ரிடி, "கட்சியின் நிறுவனத் தலைவரான இம்ரான் கானை நேரில் சந்திக்க சிறைத் துறை அனுமதி மறுப்பது கவலையை அதிகரித்துள்ளது.
சிறைக்குள் இம்ரான் கானை சந்திப்பதை உறுதிப்படுத்த அனைத்து சட்ட மற்றும் ஜனநாயக வழிமுறைகளையும் நாங்கள் கையாள்வோம். அப்போதும் அவரை சந்திக்க முடியாவிட்டால், கடைசி வழி குறித்து நாங்கள் முடிவெடுப்போம்.
பாகிஸ்தான் அரசு ரூ.5,300 கோடி அளவுக்கு ஊழலில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையே இதற்கு சான்று. இந்த ஊழல் குறித்து பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் பேச வேண்டும். ஏனெனில், இது மக்கள் பணம்" என தெரிவித்தார்.
இம்ரான் கானைச் சந்திக்க தன்னை அனுமதிக்குமாறு சிறை அதிகாரி ஒருவரிடம் சோஹெய்ல் அஃப்ரிடி வலியுறுத்தினார். "நான் எட்டாவது முறையாக இங்கு வந்துள்ளேன். பிடிஐ நிறுவனரைச் சந்திக்க எனக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது? சிறையின் பொறுப்பாளர் யார்? அவரது பெயரை கூறுங்கள்" என அந்த அதிகாரியிடம் சோஹெய்ல் அஃப்ரிடி வலியுறுத்தினார்.
இதனிடையே, இம்ரான் கானின் உடல்நிலை குறித்து ராவல்பிண்டி சிறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், அவர் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறார். அவருக்கு முழுமையான மருத்துவ கவனிப்பு வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.