பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
இஸ்லாமாபாத்: நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து பாகிஸ்தானில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80 குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பகிர்ந்தார்.
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சர்வதேச நாடுகளில் உயர்த்தப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையேற்றம் இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் பாகிஸ்தானில் நேற்று (ஏப்.3) பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது.
இந்த விலையேற்றத்தை பாகிஸ்தான் நாட்டு ரூபாயின் அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.458.41 மற்றும் ஒரு லிட்டர் டீசல் ரூ.520.35-க்கும் விற்பனை ஆனது. ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை சுமார் 50 சதவீதம் உயர்ந்தது. இது மக்களை கொதிப்படைய செய்தது.
இந்நிலையில், நேற்று பின்னிரவு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வழியாக உரையாற்றினார். அவரது 7 நிமிட உரையாடலில், “பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.458 என விற்பனை ஆகிறது. இந்த நிலையை சற்று சீராக்கும் வகையில் பெட்ரோல் விலையை 80 ரூபாய் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.378 என விற்பனை செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் முடிவுக்கு வந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை போருக்கு முந்தைய நிலையை நாட்டில் எட்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டணமில்லா பேருந்து பயணம்:
பாகிஸ்தான் தலைநகர் மற்றும் முக்கிய பிராந்தியங்களான பஞ்சாப், சிந்த் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கட்டணம் செலுத்தாமல் பேருந்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பாகிஸ்தான் ஒரு மாத காலம் நடைமுறையில் இருக்கும் என தகவல். இருப்பினும் ரயில் பயண கட்டணத்தில் அங்கு மாற்றம் ஏதும் அறிவிக்கப்படவில்லை.