இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை மாறியது

இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை  மாறியது
Updated on
1 min read

அகமதாபாத்: ஈரானிய கச்சா எண்ணெயுடன் இந்தியா நோக்கி வந்த டேங்கர் கப்பல் ஒன்று, குஜராத்தை நெருங்கிய பிறகு சீனா நோக்கி தனது பாதையை மாற்றியதாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

தெற்கு ஆப்பிரிக்க நாடான ஈஸ்வதினி கொடியை ஏந்திய 'பிங் ஷுன்' என்ற டேங்கர் கப்பல் குஜராத்தின் வதினார் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்தது.

சுமார் 6 லட்சம் பீப்பாய் ஈரானிய கச்சா எண்ணெயுடன் வந்த இந்தக் கப்பல் வியாழக்கிழமை பிற்பகல் நிலவரப்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை குஜராத் துறைமுகத்தை சென்றடையும் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் குஜராத்தை மிகவும் நெருங்கிய பிறகு அந்தக் கப்பல் திடீரென தெற்கு நோக்கி திரும்பியது. செல்லவேண்டிய இடம் தொடர்பான தனது முந்தைய அறிவிப்பை மாற்றி, சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள டோங்கியிங்கை நோக்கி செல்வதாக குறிப்பிட்டிருப்பது சரக்குச் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கெப்லர் நிறுவனத்தின் சுமித் ரிடோலியா கூறுகையில், “ஈரானிய கச்சா எண்ணெய் விஷயத்தில், பயணத்தின் நடுவில் இதுபோன்ற சேருமிட மாற்றம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. என்றாலும் பணம் செலுத்துதல் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்பட்டிருந்தால் அந்த சரக்கு ஒரு இந்திய சுத்திகரிப்பு நிலையத்துக்கு சென்றிருக்கும். இருப்பினும், சீனாவைத் தவிர மற்ற நாடுகளுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் பரிமாற்றங்களைத் தீர்மானிப்பதில், வர்த்தக விதிமுறைகளும் எவ்வளவு முக்கியமானதாக மாறி வருகின்றன என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது” என்றார்.

இந்தியா வந்த டேங்கர் கப்பல் சீனா நோக்கி பாதை  மாறியது
சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்திகளின் பங்களிப்பை கேள்வி கேட்ட மஹுவா மொய்த்ரா

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in