கராச்சி: பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் கரியன் மாவட்டத்தில் பாபி என்ற இடத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம்(என்சிடிசி) செயல்பட்டு வருகிறது. இங்கு அமெரிக்க ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் இணைந்து தீவிரவாத தடுப்பு பயிற்சியை மேற்கொள்கின்றன.
இது குறித்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க ராணுவமும் இணைந்து 13-வது கூட்டுப் பயிற்சியை ‘இன்ஸ்பைர்ட் கேம்பிட்-26’ என்ற பெயரில் மேற்கொள்கின்றன. இரண்டு வார காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் தீவிரவாத தடுப்பு பயிற்சியில் இருநாட்டு படைகளும் ஈடுபடும்.
தீவிரவாத தடுப்பு அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், சிக்கலான தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் இருநாட்டு படையினரின் திறனை வலுப்படுத்துவதற்காகவும் இந்த கூட்டுப் பயிற்சி மிக முக்கியமானது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.