நன்கார்கர் மாகாணத்தின் பிஷ்சுத் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பகுதியில் கூடியுள்ள ஆப்கன் மக்கள்.

 
உலகம்

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதல் - பலி 80 ஆக அதிகரிப்பு

மோகன் கணபதி

இஸ்லாமாபாத்: ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.

பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதிகரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் விமானப் படை வான்​வழித் தாக்​குதலை நடத்தியது.

          

இந்த பயங்​கரத் தாக்​குதலில் பெண்​கள், குழந்​தைகள் உட்பட 80-க்கும் மேற்பட்டோர் உயி​ரிழந்​தனர். மேலும் 20-க்கும் மேற்​பட்​ட​வர்​கள் படுகாயமடைந்​துள்​ளனர். எனினும், இந்த தாக்குதல் தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) என்ற தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இஸ்லாமாபாத், பஜவுர், பன்னு ஆகிய இடங்களில் நடந்த தொடர் தற்கொலைப் படைத் தாக்குதல்களில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இந்த தாக்குதலில் 80-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் பாகிஸ்தான் மக்கள் பாதுகாப்புப் படையினருடன் உறுதியாக நிற்பதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்பு நாடாளுமன்றச் செயலாளர் டான்யால் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆப்கனிஸ்தான் பல பயங்கரவாத குழுக்களுக்கு புகலிடமாக உள்ளது. ஐநா அறிக்கையின்படி, 21 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த போராளிகள் ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்பட்டு வருகின்றனர். இது பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக உள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக, ஆப்கனிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்களைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. பாகிஸ்தான் எப்போதும் அமைதியை விரும்புகிறது. ஆனால், ஆப்கனிஸ்தானின் மண், மறைமுகத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், நமது நாட்டை பாதுகாப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. தேசிய பாதுகாப்பில் நாம் சமரசம் செய்து கொள்ள முடியாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன் எதிர்ப்பு: பாகிஸ்தானின் இந்த தாக்குதலுக்கு ஆப்கனிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கனிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் ஆப்கனிஸ்தானின் இறையாண்மையை மீறிய செயல். இதற்கு பொருத்தமான நேரத்தில், பொருத்தமான பதில் அளிக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT