

பெங்களூரு: டெல்லியில் நடைபெற்ற ஏஐ உச்சி மாநாட்டில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆடையை களைந்து போராட்டம் நடத்தியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மார்கரெட் ஆல்வா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மார்கரெட் ஆல்வா, ‘‘சர்வதேச நிகழ்வுகளின்போது கண்ணியம் காக்கப்பட வேண்டும், ஒழுக்கம் பராமரிக்கப்பட வேண்டும், பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஆடையை களைந்து போராட்டம்: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் கடந்த 20-ம் தேதி இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி சர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி சர்ட்களில், இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
திடீரென இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் நிர்வாகிகளில் கிருஷ்ணா ஹரி, குந்தன் யாதவ், அஜய் குமார், நரசிம்ம யாதவ் ஆகிய 4 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவர்களை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
5-வது நபர் கைது: ஆடைகளை களைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், 5வது நபர் இன்று கைது செய்யப்பட்டார். ஜிதேந்திர யாதவ் என்ற அந்த நபரை மத்தியப் பிரதேசத்தின் குவாலியரில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கிருஷ்ணா ஹரியின் காரில் இருந்து போராட்டத்துக்குப் பயன்படுத்தப்பட்ட டி சர்ட்டுகள் மற்றும் போஸ்டர்களை கைப்பற்றி உள்ளதாக தெரிவித்த போலீஸார், மேலும் ஒரு காங்கிரஸ் நிர்வாகி பிடிபட்டுள்ளார் எனக் கூறினர்.
பாஜக போராட்டம்: சர்வதேச ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரைக் கண்டித்து பாஜகவின் இளைஞர் அணி சார்பில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
பிரதமர் மோடி கண்டனம்: டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் ஆடையை களைந்து காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டத்தை, உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச நிகழ்வை, கண்ணியமற்ற அரசியலை அரங்கேற்றும் அரங்கமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தியது. வெளிநாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் முன்பாக ஆடையை காங்கிரஸ் கட்சியினர் களைந்து நின்றனர்.
நீங்கள் அப்படித்தான் என்று நாட்டு மக்கள் அறிவார்கள். அப்படி இருக்கும்போது ஏன் உங்களது ஆடையைக் களைய வேண்டும்? இதை நான் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இந்தியாவை அவமதித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களின் இத்தகைய செயலுக்கு அக்கட்சியின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர்மாறாக உள்ளது நிலைமை. இந்தச் செயலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியினர் அவர்களை விட்டு சற்று விலகி உள்ளனர்.
நீங்கள் பிரதமர் அரியணையில் அமர வேண்டுமென்றால் மக்களின் நம்பிக்கையை முதலில் பெற வேண்டும். இன்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் தங்களின் எதிர்காலத்தை அவர்கள் பார்க்கிறார்கள். 21-ம் நூற்றாண்டில் எதிர்கொள்ளும் சவாலுக்கு இந்தியா தீர்வு தரும் என உலகம் கருதுகிறது.
முன்னொரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள விருப்பம் இருந்தும், அது நடக்காத ஒன்றாக இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது” என தெரிவித்திருந்தார்.