சிங்கப்பூர்: வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு (குடும்பம், சமூகம், பணியிடம் என எங்கு நடந்தாலும்) ஒரே இடத்தில் மருத்துவம், சட்ட உதவி, உளவியல் ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், காவல்துறை உதவி போன்ற ஒருங்கிணைந்த சேவை வழங்கிட ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ என்ற சேவை மையத்தை நாடு முழுவதும் மத்திய அரசு திறந்து உள்ளது.
இதுபோல் வெளிநாடுகளில் உள்ள இந்தியப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் ஓஎஸ்சி சேவை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கனடாவில் இந்த சேவை மையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள இந்தியப் பெண்களுக்கு உதவிட அங்குள்ள இந்திய தூதரக வளாகத்தில் ‘ஒன் ஸ்டாப் சென்டர்’ சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்குள்ள இந்தியத் தூதர் ஷில்பாக் அம்புலே கூறுகையில், “துன்பத்தில் இருக்கும் இந்தியப் பெண்களுக்கு இந்த மையம் உதவிடும். உடல், பாலியல் அல்லது உளவியல் ரீதியாக பாதிக்கப்படும் மற்றும் பொருளாதார சுரண்டலுக்கு ஆளாகும் பெண்களுக்கு அவசர உதவி, தற்காலிக தங்குமிடம், சட்டம், மருத்துவ உதவி, உளவியல் ஆலோசனை உள்ளிட்ட ஒருங்கிணைந்த சேவைகளை இந்த மையம் வழங்கும்.
பிரத்யேக தொலைபேசி (+65 8716 5521) மற்றும் மின்னஞ்சல் (osc.singapore@mea.gov.in) மூலம் இந்தியப் பெண்கள் 24 மணி நேரமும் உதவியை நாடலாம்” என்றார்.