ஸ்டாக்ஹோம்: இந்த ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசுக்கு (நோபல் நினைவு பொருளாதாரப் பரிசு), அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களான மைக்கேல் உட்ஃபோர்டு மற்றும் ராபர்ட் இ. ஹால் ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் கழகம் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆண்டு நோபல் பரிசு அறிவிப்புகளின் வரிசையில் இதுவே இறுதி விருதாகும்.சுமார் 1.2 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தப் பரிசு, அவர்களின் பொருளாதாரக் கோட்பாட்டுப் பங்களிப்புக்காக வழங்கப்படுகிறது.
பணவீக்கம், உற்பத்தி, நுகர்வு போன்றவற்றுக்கு இடையிலான புள்ளிவிவரத் தொடர்புகளை மட்டும் சார்ந்திராமல், மக்கள் மற்றும் நிறுவனங்களின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பொருளாதார மாதிரிகளை உருவாக்க முடியும் என்று இவர்கள் காட்டியதாக நோபல் குழு தெரிவித்தது.
இதன் மூலம் பொருளாதாரத்தை நிலைப்படுத்தும் கொள்கைகளுக்குப் புத்துயிர் அளித்ததாகக் குழு பாராட்டியது. அதாவது, மக்களும் நிறுவனங்களும் எவ்வாறு முடிவெடுக்கிறார்கள் என்ற அடிப்படையிலிருந்து முழுப் பொருளாதாரத்தின் செயல்பாட்டையும் விளக்கும் வழிமுறையை அவர்கள் உருவாக்கினர்.
இந்தப் பரிசின் அதிகாரப்பூர்வப் பெயர் “ஆல்ஃப்ரெட் நோபல் நினைவாக வழங்கப்படும் பேங்க் ஆஃப் ஸ்வீடன் பொருளாதார அறிவியல் பரிசு.” டைனமைட்டைக் கண்டுபிடித்து, ஐந்து நோபல் பரிசுகளை நிறுவிய 19-ம் நூற்றாண்டு ஸ்வீடிஷ் தொழிலதிபரும் வேதியியலாளருமான ஆல்ஃப்ரெட் நோபலின் நினைவாக, ஸ்வீடன் மத்திய வங்கி 1968-ம் ஆண்டு இதை உருவாக்கியது.
கடந்த ஆண்டு இந்தப் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன், பீட்டர் ஹோவிட் ஆகிய மூவருக்கு வழங்கப்பட்டது. புதிய தொழில்நுட்பமும் உற்பத்தி முறைகளும் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதையும், புதிய கண்டுபிடிப்புகளால் பழைய நிறுவனங்கள் பின்தங்கிப் போவதையும் விளக்கும் “படைப்பாக்க அழிவு” கோட்பாட்டுக்காக இவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.மைக்கேல் உட்ஃபோர்டு ராபர்ட் இ. ஹால்