நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டூர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
புதுடெல்லி: நோபல் பரிசை சுயாதீன குழுதான் வழங்குகிறது; அதில் நார்வே அரசின் தலையீடு அறவே இல்லை என ட்ரம்ப்புக்கு பதில் தந்துள்ளார் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டூர்.
டென்மார்க்கின் தன்னாட்சி பிராந்தியமாக உள்ள கிரீன்லாந்தை அமெரிக்கா கைப்பற்றும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தங்கள் தேசத்தின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்றும், அதற்காக கிரீன்லாந்தை தனது தலைமையிலான அரசு விலைக்கு வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் ட்ரம்ப் அறிவித்தார்.
அவரது அறிவிப்புக்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டத்தில் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த டென்மார்க், நார்வே, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரி வரும் பிப்.1 முதல் அமலுக்கு வருகிறது.
“உலக அளவில் 8 போர்களை நிறுத்தியதற்காக உங்கள் தேசம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்காததை கருத்தில் கொண்டு, இனி அமைதி குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டிய கடமை எனக்கு இல்லை என்று நினைக்கிறேன். அமெரிக்காவுக்கு எது நல்லது மற்றும் சரியானது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவேன்.
ஆர்க்டிக் பகுதியில் உள்ள கிரீன்லாந்தை ரஷ்யா மற்றும் சீனாவிடமிருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. எங்கள் கட்டுப்பாட்டில் கிரீன்லாந்து வரும் வரை உலகம் பாதுகாப்பானதாக இருக்காது” என்று நார்வே பிரதமருக்கு ட்ரம்ப் கடிதம் அனுப்பியதாக தகவல் வெளியானது. இது சமூக வலைதளத்தில் வலம் வந்தது.
இதையடுத்தே தனது நிலைப்பாட்டை நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டூர் அறிக்கையாக வெளியிட்டார். இதை சர்வதேச செய்திகளை வெளியிடும் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது.
அதில் அவர் கூறியுள்ளதாவது: “நோபல் பரிசை சுயாதீன குழுதான் வழங்குகிறது. இதை அதிபர் ட்ரம்ப் உட்பட அனைவரும் நன்கு அறிவர். அதில் நார்வே அரசின் தலையீடு அறவே இல்லை. இதை நான் மீண்டும் தெரிவிக்க விரும்புகிறேன். கிரீன்லாந்து விவகாரத்தில் டென்மார்க் நாட்டுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். ஆர்க்டிக் பகுதியில் நாட்டோ அமைப்பு மேற்கொள்ளும் பாதுகாப்பு சார்ந்த பணிகளுக்கு ஆதரவாக நார்வே துணை நிற்கும்” என்றார்.