இஸ்லாமாபாத்: அமெரிக்காவுடன் இந்தியா அண்மையில் மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தம் பாகிஸ்தானில் கடும் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுடன் பல மாதங்களாக பாகிஸ்தான் நெருக்கம் காட்டியும், அதனால் எந்தப் பயனும் இல்லை. மரியாதையை விலைக்கு வாங்க முடியாது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் மேற்கொண்ட தீவிர முயற்சிகளுக்குப் பலனாக, பாகிஸ்தானுக்கு 19 சதவீத வரியை அமெரிக்கா நிர்ணயித்தது. ஆனால், பல மாதங்களாக டிரம்பின் அழுத்தங்களுக்குப் பணியாமல் உறுதியாக நின்ற இந்தியா 18 சதவீத வரியுடன் பாகிஸ்தானை விட சாதகமான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த அதிபர் டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று அறிவித்தார். இது பாகிஸ்தானுக்கு விதிக்கப்பட்ட வரியை விட ஒரு சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசுக்கு பரிந்துரை, அமைதி வாரியத்துக்கு ஆதரவு என பாகிஸ்தான் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவை விட கூடுதல் வரிச்சுமையையே அந்த நாடு பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் பாகிஸ்தான் அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அளவுக்கு அதிகமான பணிவைக் காட்டாமலேயே இந்தியா எப்படி சிறந்த ஒப்பந்தத்தைப் பெற்றது எப்படி என்பது குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துக்கள் அந்நாட்டு அரசின் இயலாமையை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளன.
வியூகம் தோற்றுவிட்டது
சமூக வலைதளவாசி ஒருவர் கூறுகையில், ``விற்பனையாளராக செயல்பட்ட பாகிஸ்தான் அரசின் வியூகம் தோற்றுவிட்டது. பலுசிஸ்தானின் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு நீங்கள் பெட்டி பெட்டியாகக் கொடுக்கலாம், ஆனால் மரியாதையை விலைக்கு வாங்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.