ஆர்எஸ்பி கட்சியின் பிரதமர் வேட்பாளர் பாலேந்திர ஷா.

 
உலகம்

நேபாள பொதுத் தேர்தல்: ஆர்எஸ்பி கட்சி 110 இடங்களில் முன்னிலை!

நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேந்திர ஷா?

வேட்டையன்

காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த 5-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஸ்வதந்த்ரா கட்சி (ஆர்எஸ்பி) பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நேபாளத்​தில் கடந்த ஆண்டு ஆட்​சிக் கவிழ்ப்​புக்கு வித்திட்ட ஜென் இசட் இளைஞர்​களின் போராட்​டத்​துக்​குப் பிறகு, அந்​நாட்​டின் முதல் பொதுத் தேர்​தல் கடந்த 5-ம் தேதி நடை​பெற்​றது. நேபாள நாடாளு​மன்​றத்​தின் கீழ​வை​யான பிர​தி​நி​தி​கள் சபை​யில் மொத்​தம் 275 இடங்​கள் உள்​ளன. இதில் 165 இடங்​கள் நேரடித் தேர்​தல் மூல​மும் மீத​முள்ள 110 இடங்​களுக்கு விகி​தா​ச்சார பிர​தி​நி​தித்​துவ முறை​யிலும் உறுப்​பினர்​கள் தேர்ந்​தெடுக்​கப்படுவார்கள்.

          

நேரடி தேர்​தலில் 3,406 வேட்​பாளர்​களும், விகி​தா​ச்சார முறை​யில் 3,135 வேட்​பாளர்​களும் போட்டியிட்டனர். மொத்தம் 1.89 கோடிக்​கும் அதி​க​மான தகுதிபெற்ற வாக்காளர்​களில் சுமார் 60 சதவீத வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகின. இதை அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி தொடங்கியது.

ஆர்எஸ்பி முன்னிலை: தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் நேபாளத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ஆர்எஸ்பி கட்சி, மொத்தம் உள்ள 165 தொகுதிகளில் சுமார் 99 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல். 18 தொகுதிகளில் ஆர்எஸ்பி வெற்றி பெற்றது. இது நேபாள அரசியலில் புதிய திருப்பமாக அமைந்துள்ளது. நேபாளத்தில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த கட்சிகளை ஆர்எஸ்பி-யின் வரவு பின்னிலை அடையச் செய்துள்ளது.

நேபாள காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்) 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. இதன் 27 ஆண்டுகால நேபாள அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 1999-ல் நேபாள காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் உட்கட்சி அரசியல் காரணமாக ஓராண்டு காலத்தில் அந்த ஆட்சி கவிழ்ந்தது.

நேபாளத்தின் புதிய பிரதமர் பாலேந்திர ஷா? - 35 வயதான பாலேந்திர ஷா, ஆர்எஸ்பி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறியப்படுகிறார். அக்கட்சி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில் பாலேந்திர ஷா பிரதமராக பொறுப்பேற்பார். அவர் ராப் இசைக்கலைஞர். தற்போது தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். ‘பாலேன்’ என நேபாள மக்களிடையே அறியப்படுகிறார். நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை காட்டிலும் பாலேந்திர ஷா முன்னிலையில் உள்ளார்.

SCROLL FOR NEXT