நேபாளத்தின் தாதிங் பகுதியில் வெள்ளத்தால் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. அங்கு மண் மூடிய ஒரு வீட்டில் ராணுவ வீரர்கள் நேற்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படம்: பிடிஐ

 
உலகம்

நேபாளத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 682 ஆக உயர்வு: 4-வது நாளாக மீட்புப் பணிகள் தீவிரம்

உலக நாடுகள் தாராளமாக நிவாரண உதவி வழங்க வேண்டுகோள்

செய்திப்பிரிவு

காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தால் இதுவரை 682 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. 4-வது நாளாக நேற்றும் இரவு, பகலாகத் தீவிர மீட்புப் பணி நடைபெற்றது.

கடந்த 26-ம் தேதி நேபாள நாட்டின் இமயமலையில் லாங்டாங் லிருங் சிகரத்தில் பனிமலை உடைந்து போடே கோசி, திரிசூலி, நாராயணி நதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் நேபாளத்தின் ரசுவா, தாதிங், நுவாகோட் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ள பாதிப்பில் நேபாளத்தில் இதுவரை 682 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு உள்ளன. வெளிநாட்டினர் உட்பட 3,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடைபெறுகிறது. நான்காவது நாளாக நேற்றும் அதிதீவிரமாக மீட்புப் பணிகள் நடைபெற்றன. நேபாள போலீஸ், ராணுவத்தைச் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன. வெள்ள பாதிப்புகளால் நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு பகுதிகளில் மருந்துகள், குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக நேபாள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நேபாள வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நேற்று கூறியதாவது: வெளிநாடுகளின் உதவியை நேபாள அரசு ஏற்க மறுத்துவிட்டதாக வெளியான தகவல்கள் தவறானவை. மீட்பு, நிவாரணம், மறுசீரமைப்புப் பணிகளுக்கு வெளிநாடுகளின் உதவி தேவைப்படுகிறது.

இந்தியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தாராளமாக நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றன. ரசுவா மற்றும் நுவாகோட்டில் உள்ள நீர்மின் சுரங்கங்களுக்குள் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்க இந்தியாவின் உதவியை கோரி உள்ளோம். நேபாளத்துக்கு உதவ நினைக்கும் வெளிநாட்டினர் பிரதமரின் பேரிடர் மீட்பு நிதிக்கு ஆன்லைன் வாயிலாக பணம் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது: நேபாளத்தின் கோரிக்கையை ஏற்று சுரங்க மீட்புக் குழுவை அனுப்ப நாங்கள் தயாராகி வருகிறோம்.

இதற்காகக் கள நிலவரத்தையும், என்னென்ன உபகரணங்கள் தேவைப்படும் என்பதையும் மதிப்பிடுவதற்காக முதலில் ஒரு கள ஆய்வுக் குழு விமானத்தில் நேபாளம் சென்றுள்ளது. நாங்கள் ஒரு மருத்துவக் குழுவையும் நேபாளத்துக்கு அனுப்புகிறோம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்காலிக பாலங்களை அமைக்க தேவையான உபகரணங்களை நாங்கள் வழங்கியுள்ளோம். இந்தியாவின் உதவியுடன் நேபாளத்தில் ஏற்கெனவே தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. நேபாளத்துக்கு 3 விமானங்களில் மொத்தம் 57.5 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

287 இந்தியர்கள் மாயம்: இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீனாவின் திபெத் பகுதியில் சிக்கித் தவித்த 120 பேர் பத்திரமாக நேபாள பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவார்கள். நேபாளத்தில் இதுவரை 88 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். 287 இந்தியர்களைக் காணவில்லை. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 128 இந்திய வம்சாவளியினரையும் காணவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 பனிமலை ஏரி: இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரத்தில் உருவான பனிமலை ஏரி உடைந்ததால் கடந்த 26-ம் தேதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. கடந்த 27-ம் தேதி அதே பகுதியில் மற்றொரு பனிமலை ஏரி உடைந்து மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது லாங்டாங் லிருங் சிகர பகுதிகளில் புதிதாக 2 பனிமலை ஏரிகள் உருவாகி உள்ளன.

இதில் ஒரு ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. மற்றொரு ஏரி வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்த 2 பனிமலை ஏரிகளின் மீது மிகப்பெரிய பனிப்பாறைகள் விழுந்தால் ஏரிகள் உடைந்து மீண்டும் நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாகச் சீன, நேபாள புவியியல் வல்லுநர்கள் 2 ஏரிகளின் நிலவரத்தைச் செயற்கைக்கோள்கள் மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

934 பேரை காணவில்லை: இது குறித்து நேபாள அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெள்ளம் காரணமாக ரசுவா, நுவாகோட் மாவட்டங்களில் உள்ள 11 நீர்மின் திட்டப் பணிகளில் ஈடுபட்ட 934 பேரைக் காணவில்லை. சுமார் 400 பேர் சுரங்கத்தில் சிக்கி உள்ளனர். அந்தச் சுரங்கம் முழுவதும் சேறும் சகதியுமாக உள்ளது. சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க இந்தியா மற்றும் சீனாவின் உதவியை நாடி உள்ளோம்” என்றனர்.

ரசுவா நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய தொழிலாளர்களில் 4 இந்தியர்கள் நேற்று மீட்கப் பட்டனர். கிருபா சங்கர், ரிபு குமார், சானேஸ்வர், முகமது ஆகியோர் மீட்கப்பட்டு தலை நகர் காத்மாண்டுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அங்கிருந்து அவர்கள் டெல்லி திரும்புவார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

SCROLL FOR NEXT