கொழும்பு: இலங்கையில் டிட்வா புயல் காரணமாக வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே அவசர நிலையை அறிவித்துள்ளார். இலங்கையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 80 வீரர்களை இந்தியா நேற்று அனுப்பியது.
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் இலங்கையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 123 பேர் உயிரிழந்தனர். 130 பேரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது. காயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்கள் சங்கம் அதிபர் திசநாயகேவுக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியது.
இதுகுறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டம் நேற்று முன்தினம் கூட்டப்பட்டது. அவசரநிலையை அறிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நெருக்கடி நிலையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர், சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள் தேவையான இடங்களில் விரைவில் பணியமர்த்தப்படுவர்.
80 இந்திய வீரர்கள்: இலங்கையில் வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 80 வீரர்களை விமானப்படை விமானம் மூலம் இந்தியா நேற்று அனுப்பியது. இவர்கள் படகுகள், மரம் வெட்டும் உபகரணங்கள், தகவல் தொடர்பு சாதனங்கள், முதலுதவி பொருட்களுடன் சென்றுள்ளனர். அண்டை நாடான இலங்கைக்கு உதவும் ஆபரேஷனுக்கு சாகர் பந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக தேசிய பேரிடர் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது.