வாஷிங்டன்: இந்தியப் பிரதமர் மோடியும் என்னைப் போன்றவர், அவருக்குத் தூக்கம் வராது என்று பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார்.
அமெரிக்க-இந்திய உத்திசார் கூட்டாண்மை உச்சி மாநாடு வாஷிங்டனில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் பேசியதாவது: 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் ட்ரம்ப்புடன் மியாமி யில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றேன். அப்போது அவர் என்னை உடனே பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைக்குமாறு தெரிவித்தார். அதற்கு நான் சற்று தயங்கி, இந்தியாவில் தற்போது காலை 6 மணி என்று தெரிவித்தேன்.
இதற்கு அதிபர் ட்ரம்ப் கூறும்போது, பிரதமர் மோடி தூங்கவே மாட்டார். அவர் என்னைப் போன்றவர். அவர் எப்போதோ படுக்கையிலிருந்து எழுந்து விட்டிருப்பார் என்று பாராட்டு தெரிவித்தார். இந்தச் சம்பவம் அதிபர் ட்ரம்புக்கும் மோடிக்கும் இடையிலான தனிப்பட்ட பிணைப்பை காட்டுகிறது. சில தலைவர்களுடன் நாங்கள் சந்திப்புகளைத் திட்டமிடுகிறோம், ஏனென்றால் அவர் பிரதமர் மோடிக்கு கொடுக்கும் அதே மதிப்பைக் கொடுப்பதில்லை.
அமெரிக்கா-இந்தியா ஆகிய 2 நாடுகளின் உறவுகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அடுத்த 2 ஆண்டுகள் முக்கியமானவை. அடுத்த 2 ஆண்டுகள், இந்த உறவை வரவிருக்கும் பல பத்தாண்டுகளுக்கான பாதையில் செலுத்தும். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் உறுதியான முடிவுகளை வழங்குவதில் இரு அரசுகளும் கவனம் செலுத்துகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.