டாக்காவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்.
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 24-ம் தேதி இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அது மதம் சார்ந்த காரணங்களுக்காக நிகழவில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தில் அரசியல் சூழல் நிலையற்றதாக மாறிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கு மதம் சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இஸ்லாமிய மதத்தை அவமதித்துவிட்டதாகக் கூறி தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் மதவாத கும்பல் ஒன்றால் சமீபத்தில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.
கொலைக்குப் பிறகு அவரது உடலை மரத்தில் கட்டி தொங்கவிட்ட அந்த கும்பல், அதன் பிறகும் அவரைக் கொடூரமாக தாக்கியதோடு தொடர்ந்து அவரது உடலை தீயிட்டு எரித்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகியதை அடுத்து, இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஐக்கிய நாடுகள் சபையும் இந்த சம்பவத்தைக் கண்டித்தது.
மேலும் ஒரு இந்து இளைஞர் கொலை... இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி மேலும் ஒரு இந்து இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட நபர் ராஜ்பரி நகருக்கு அருகே உள்ள ஹோசென்டங்கா கிராமத்தை சேர்ந்த அம்ரித் மொண்டல் (எ) சாம்ராட் (29) என தெரியவந்தது. சாம்ராட் மற்றும் சிலர் சேர்ந்து ஒரு வீட்டுக்குச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாகவும், இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி அவரை சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில், சாம்ராட் உயிரிழந்தார்.
அரசு விளக்கம்: இந்தச் சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வங்கதேச இடைக்கால அரசாங்கம், ‘‘அம்ரித் மண்டல் எனும் சாம்ராட் கொலையின் பின்னணியில் மதம் சார்ந்த காரணங்கள் இல்லை என்பது தெரிவித்துள்ளது. காவல்துறையால் வழங்கப்பட்ட தகவல்களின்படியும் ஆரம்பக்கட்ட விசாரணையின்படியும் இது மத ரீதியாக நிகழ்ந்த தாக்குதல் அல்ல. மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான சம்பவம் இது.
கொல்லப்பட்ட நபர் பணம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த ஒரு பயங்கரவாதி. ஆத்திரமடைந்த உள்ளூர் மக்களுடனான மோதலில் அவர் உயிரிழந்தார். சாம்ராட்டின் கூட்டாளியான சலீம் என்பவரை கைது செய்துள்ள போலீஸார், அவரிடம் இருந்து ஒரு வெளிநாட்டு கைத் துப்பாக்கி மற்றும் ஒரு குழல் துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொல்லப்பட்ட நபரின் மத அடையாளத்தை முன்னிலைப்படுத்தி, அதை ஒரு மதவாத தாக்குதலாக சித்தரிக்க ஒரு குறிப்பிட்ட தரப்பினர் முயற்சி மேற்கொண்டதை அரசாங்கம் மிகுந்த கவலையுடன் கவனத்தில் கொண்டுள்ளது. தொடர்புடைய அனைவரும் பொறுப்பான முறையில் நடந்து கொள்ளுமாறு அரசாங்கம் வலியுறுத்துகிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.