ரியாத்: செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த சவுதி அரேபிய எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்கா, ஈரான் இடையிலான மோதலால் ஹார்முஸ் ஜலசந்தியில் கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதன் காரணமாக சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் கச்சா எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக செங்கடலின் பாப் எல் மண்டேப் ஜலசந்தி வழியாக சவுதி அரேபிய நிறுவனங்கள் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகின்றன.
இந்த ஜலசந்தி அருகே ஈரானின் நட்பு நாடான ஏமன் அமைந்துள்ளது. ஏமனின் பெரும்பகுதியை ஆட்சி செய்யும் ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே 11 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. தற்போது ஈரானின் உத்தரவின்படி செங்கடலின் பாப் எல் மண்டேப் ஜலசந்தி வழியாகச் செல்லும் சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்தி கிளர்ச்சிப் படை ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த சூழலில் சவுதி அரேபியாவின் யான்பு துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட அந்த நாட்டின் எண்ணெய் கப்பல் நேற்று செங்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது கப்பலை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் கப்பல் தீப்பிடித்து எரிந்தது. இந்த தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. வழக்கமாக தாக்குதலுக்கு பொறுப்பேற்கும் ஹவுத்தி கிளர்ச்சிப் படை இந்த முறை மவுனம் காத்து வருகிறது. இதனால் ஏவுகணை தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து சவுதி அரேபிய கடற்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.