

புதுடெல்லி: தமிழகத்தில் கலந்தாய்வு முடிந்த பின்னரும் காலியாக இருந்த உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒப்படைக்கப்பட்டது.
அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட இடங்களை நிரம்பாமல் இருந்தால் அதனை முழுவதுமாக மீண்டும் தமிழக அரசு வசம் ஒப்படைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “தமிழகத்தில் கலந்தாய்வுக்கு பின்னரும் நிரம்பாமல் இருந்த 151 உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கிய இடங்கள் கலந்தாய்வு முடிந்த பின்னரும் நிரம்பாமல் இருந்தால் அவற்றை மீண்டும் தமிழகம் வசம் ஒப்படைக்க வேண்டும்” எனக் கோரினார்.
அதற்கு மத்திய அரசு தரப்பில், தமிழகம் முதலில் 151 இடங்களையும், பின்னர் மேலும் 2 இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கியதாகவும், அவற்றில் 113 இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தரப்பில், அகில இந்திய தொகுப்புக்கு தமிழகத்தால் வழங்கப்பட்ட இடங்களில் நிரம்பாமல் உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான இடங்களையும் தமிழகத்திற்கே திரும்ப வழங்க வேண்டும். மேலும், அந்த மருத்துவ இடங்களை தமிழகத்தில் கலந்தாய்வு மூலம் நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆஃப் மதிப்பெண் சதவீதத்தையும் குறைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. 111 மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் சேர தமிழகத்தில் காத்திருப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், நிரம்பாமல் உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கட்-ஆஃப் சதவீதத்தை குறைத்து, அந்த இடங்களை தமிழகம் வசமே திரும்ப ஒப்படைப்பது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் முடிவெடுக்க அறிவுறுத்தி, வழக்கை ஒத்திவைத்தனர்.