ரியாத்: முஸ்லிம்களின் புனித நகரமான மெக்காவை குறிவைத்து ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இந்நிலையில் 47 ஆண்டுகளுக்கு முன், 1979 நவம்பர் 20-ம் தேதி மெக்காவிலுள்ள கிராண்ட் மசூதியை 600 பேர் கொண்ட ஆயுதக் குழுவினர் முற்றுகையிட்ட நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. 1979-ல் காபாவைச் சுற்றி அமைந்துள்ள கிராண்ட் மசூதியான மஸ்ஜித் அல் ஹராமில் விடியற்காலை தொழுகை முடிந்த நிலையில் 600 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழுவினர் மசூதியை முற்றுகையிட்டனர். அவர்களை முறியடித்து வெளியேற்றுவதற்காக சவுதி அரேபியப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
இருந்தபோதும் 2 வாரங்களுக்கு இந்த முற்றுகை நீடித்தது. மசூதி வளாகங்களில் ஆயுதக் குழுவினர் குண்டுகளை வீசி தாக்குதலும் நடத்தினர். சவுதி படைகள் மசூதி வளாகத்துக்குள் நுழைந்து, அதன் பகுதிகளை படிப்படியாக மீட்டெடுத்தன. ஆனால் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், மசூதிக்குக் கீழே இருந்த பாதாள அறைகள், நிலத்தடிப் பாதை ஆகியவற்றின் வழியாக பின்வாங்கினர். வெளிநாட்டு உதவியுடன் கிளர்ச்சியாளர்களை சவுதி அரேபியப் படைகள் வெளியேற்றியது நினைவுகூரப்படுகிறது.