டாக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த தாரிக் ரஹ்மான்
டாக்கா: ‘‘வங்கதேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை செய்வோம்’’ என்று தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வங்கதேச பொதுத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி தேர்தல் நடைபெற்ற 297 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது. இதன் மூலம், தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், தேர்தல் வெற்றிக்குப் பிறகு வங்கதேச தேசியவாத கட்சி சார்பில் டாக்காவில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கட்சியின் முன்னணி தலைவர்களுடன் இணைந்து தாரிக் ரஹ்மான் செய்தியாளர்களைச் சந்தித்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியது: “இந்த தேர்தல் வெற்றி வங்கதேசத்துக்கு உரியது. இந்த தேர்தல் மூலம், சுதந்திரம் மற்றும் உரிமை ஆகியவற்றின் உண்மையான சாரம்சம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரும் இப்போது சுதந்திரமாக இருக்கிறோம். தேசத்தை கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இதைச் செய்வோம். பொறுப்பாக இருந்து நாம் நமது கடமைகளைச் செய்வோம்.
நாட்டின் ஒற்றுமைதான் நமது பலம், பிரிவினை பலவீனம். எனவே, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தொண்டர்கள் வெற்றியை அமைதியாகக் கொண்டாட வேண்டும். தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். நியாயமான தேர்தல்களை நடத்தியதற்காக இடைக்கால அரசாங்கத்துக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தாரிக் ரஹ்மான் பேசினார்.