டெல் அவிவ்: தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டதாகவும், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் நபாத்தியா மாவட்டத்தின் பல நகரங்கள் மீது நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை இந்த தாக்குதல்களை இஸ்ரேல் ராணுவம் நடத்தி உள்ளது. வான்வழித் தாக்குதலோடு பீரங்கித் தாக்குதல்களும் நடந்ததாக லெபனான் ஊடகங்களும், அப்பகுதி மக்களும் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 4 பேர் ஹிஸ்புல்லா படையினரால் கொல்லப்பட்டதை அடுத்து, பதில் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானின் பல பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரையும் அவர்களின் உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் ஆதரவு பெற்ற அந்த அமைப்பு மீண்டும் மீண்டும் போர் நிறுத்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதல்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹிஸ்புல்லா இயக்கம், “தெற்கு லெபனானின் அலி அல் தாஹெர் குன்றின் அருகே முன்னேறி வந்த இஸ்ரேலியப் படையை எங்கள் போராளிகள் பதுங்கி இருந்து தாக்கினர். ஏவுகணைகள் மூலம் மூன்று டாங்கிகளை அழித்தனர். ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் துருப்புகளை குறிவைத்தனர். மோதல்கள் தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளது.
ஈரானுடனான அமெரிக்க - இஸ்ரேல் போரை முடிவுக்குக் கொண்டு வர ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதல் போர் நிறுத்தத்தை கேள்விக்குள்ளாக்கி இருக்கிறது. ஏனெனில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவும் லெபனானின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை இரு தரப்பினரும் மதிக்கவும் இந்த ஒப்பந்தம் வலியுறுத்துகிறது.
தெற்கு லெபனானில் தனது படைகளை நிறுத்தியுள்ள இஸ்ரேல், தெற்கு லெபனானில் 10 கிலோ மீட்டர் வரை தனது துருப்புகளை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் அலுவலகத்துடன் இஸ்ரேல் கடுமையான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது. தெற்கு லெபனானில் உள்ள தனது படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகளை நிராகரித்து வரும் இஸ்ரேல், ஹிஸ்புல்லா நிலைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.